புதுடெல்லி: கடந்த 2019ல் தீவிரவாத முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் எல்லைக்கு அப்பால் உள்ள பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பங்கேற்ற போர் விமானி ஒருவர், குடும்ப தகராறு காரணமாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனைவி அளித்த புகாரின் கீழ் ஐஐஎம் பட்டதாரியான அந்த போர் விமானி மீது போலீசார் பதிவு செய்த எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், தனது மனைவி மற்றும் மாமனாரால் தானும் தனது குடும்பத்தினரும் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘பழிவாங்கும் வாழ்க்கையை நடத்தாதீர்கள்.
நீங்கள் இருவரும் இளமையாக உள்ளீர்கள். உங்களுக்கு நீண்ட ஆயுள் உள்ளது. எனவே ஒருவரையொருவர் மன்னித்து, பிரச்னையை மறந்து வாழுங்கள். நீங்கள் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும். எனவே பிரச்னையை சுமூகமாக தீர்த்துக் கொள்ளுங்கள்’’ என அறிவுறுத்தி, மனைவி தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர்.