ஆவடி: ஆவடி பகுதிகளில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் கோலமிட்டு அசத்தினர். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புகள் நாளுக்குநாள் வலுத்து வருகிறது. அந்த வகையில் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் சா.மு.நாசர் உத்தரவின்பேரில் ஆவடி 17வது வார்டு மற்றும் சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பாக அயப்பாக்கம் ஊராட்சியில் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியம், மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியச் செயலாளர் துரை வீரமணி ஏற்பாட்டில் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு, மாநில அரசுக்கு நிதி அளிக்காமல், கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்ற ஒன்றிய அரசின் போக்கை கண்டித்து அயப்பாக்கத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுகூடி 500க்கும் மேற்பட்ட எதிர்ப்பு கோலமிட்டனர்.
அயப்பாக்கம் ஊராட்சி ஹவுசிங் போர்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முன்பு கோலமிட்டதோடு இந்தியை திணிக்காதே! தமிழர்களை வஞ்சிக்காதே! மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே! உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை எழுதி மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கோலமிட்டு இருந்தனர். இதுகுறித்து பேசிய பெண்கள், தமிழ்நாட்டில் இந்தயை திணிக்க வேண்டாம், எங்களுக்கு தமிழ் மொழி இருக்கிறது, தேவைப்பட்டால் ஆங்கிலத்தை பயன்படுத்திக் கொள்வோம். ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


