Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆரூர் ஆழித் தேர்

தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் உள்ள தேர்களிலேயே தனித்துவம் பெற்ற தன்மை கொண்டது திருவாரூர் தேராகும். இதனை ஆழித்தேர் எனக் குறிப்பர். ‘‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே’’ என்பது திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவாக்காகும். பொதுவாகத் தேர் என்பது ஒரு நகரும் கோயிலாகும். அடியார்களுக்காக இறைவன் தேர் ஏறி திருவீதியில் வந்து அனைவர்க்கும் காட்சி கொடுப்பதே தேர் விழாவின் தனித்துவமாகும். திரிபுர அசுரர்கள் மூன்று வித கோட்டைகள் கொண்டு அனைவர்க்கும் இன்னல்கள் தந்தபோது சிவபெருமான் தேர் ஏறிச் சென்று திரிபுரங்களை எரியூட்டி அழித்தார் என்று தொன்மங்கள் கூறுகின்றன. தஞ்சாவூர் தாராசுரம் போன்ற திருக்கோயில்களில் சிவ பெருமான் தேர் ஏறி திரிபுரம் நோக்கிச் செல்லும் அரிய சிற்பக்காட்சிகள் இருப்பதைக் காணலாம்.

‘‘தேர் ஊரும் நெடுவீதி பற்றி நின்று, திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது, ஆரூரா! ஆரூரா! என்கிறார்கள் - அமரர்கள் தம் பெருமானே! ஆரூராயே’’ என்று திருநாவுக்கரசு பெருமானார் போற்றும் தொன்மையைப் பெருமை வாய்ந்த ஆரூர்த் திருத்தேருக்கு இன்றும் அழைக்கப்பெறும் சிறப்புப் பெயர் ‘‘ஆழித்தேர்’’ என்பதேயாகும். பவனி வீதிவிடங்கனின் திருவிழாக்களான பங்குனித் திருநாளையும், மார்கழி ஆதிரை நாளையும் அப்பர் பெருமான் கண்டு களித்ததை தம் ஆரூர் பதிகத்தில், ‘‘ஆரூர் அகத்து அடக்கிப் பார் ஊர் பரப்பத் தம் பங்குனி உத்தரம் பார் படுத்தான்’’ என்றும், ‘‘இந்திரன் ஆதிவானவர், சித்தர் எடுத்து ஏத்தும் அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்!’’ என்றும் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு மிகத் தொன்மைப் பெருமை வாய்ந்த இவ்விழாக்களில் பங்குனி உத்திரப் பெருவிழா பங்குனி ரதோத்ஸவ விழா என்ற பெயரால் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்றது. தஞ்சாவூர் அரண்மனை சரஸ்வதி மகாலில் உள்ள மராட்டிய மன்னர் காலத்து மோடி ஆவணம் ஒன்றில் கி.பி. 1843ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆரூர் விழா பற்றிய குறிப்புகள் உள்ளன.

இதில் ‘‘திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி பங்குனி ரதோத்ஸவம் மாசி மாதம் 8ஆம் தேதி முதல் சித்திரை இரண்டாம் தேதி வரையிலும் ஐம்பத்து ஐந்து நாள் உத்சவ விவரங்கள்’’ - என்ற பட்டியல் உள்ளது. இதேபோன்று தேவாசிரிய மண்டபத்து விதானத்தில் கி.பி. 1700 ஆண்டுகளில் எழுதப்பெற்ற ஓவியத் தொகுப்பில் பங்குனித் திருநாள் காட்சிகள் துவஜாரோகணம் எனும் கொடியேற்று நாளிலிருந்து அனைத்து விழாக்களும், வண்ணப் படைப்பாக, தமிழில் எழுதப்பெற்ற காட்சி விளக்கங்களுடன் உள்ளன.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவர் களின் ஆளுகையின்போதும், பின்னர் சோழப் பேரரசர்கள் காலத்திலும், விஜயநகர அரசர்கள் காலத்திலும், பின்னாளில் தஞ்சை மராத்தியர்கள் காலத்திலும் தொடர்ந்து ஆரூரில் பங்குனிப் பெருவிழா நிகழ்ந்தமையை அறிகிறோம். இப்பெரு விழாவின் முக்கிய அங்கம் வசந்தோற்சவத்தில் ரதாரோஹணம் என்னும் ஆழித்தேர் பவனி வரும் திருநாளேயாகும்.

ஹஸ்த நட்சத்திரத்தில் துவஜாரோஹணம் எனும் கொடியேற்றி பூசத்தில் தேருக்குச் சென்று, ஆயில்ய நாளில் தேரோட்டம் நிகழ்த்தி உத்திரத்தில் தீர்த்தம் அருளி, உத்திராடத்தில் விழாவைப் பூர்த்தி செய்வது மரபாகும். இது முப்பத்து ஆறு நாள் திருவிழாவாகும். இதுதவிர விழா தொடக்கத்திற்கு முன்பு பூர்வாங்கம் ஒரு நாளும், ஐயனார் திருவிழா ஐந்து நாட்களும், பூர்வாங்கம் ஒரு நாளும், பிடாரி திருவிழா பத்து நாட்களும், பூர்வாங்கம் இரண்டு நாட்களும், கொண்டாடி பங்குனிப் பெருவிழா முப்பத்தாறு நாட்களும் சேர்த்து ஐம்பத்து ஐந்து நாட்கள் ரதோத்ஸவம்

நடத்தினர்.

ஆரூர் மரத்தேரின் உயரம் 30 அடியாகும். விமானம் வரை உள்ள தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்பெறும் பகுதி 48 அடியாகும். சிகரம் 12 அடி, தேர்க்கலசம் 6 அடி உயரமாகும். தேரின் மொத்த உயரம் 96 அடியாகும்.மரத்தேரின் எடை இரும்பு அச்சுகள் சக்கரங்கள் உள்பட 220 டன்னாகும். இதன்மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும் சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும், ஒரு டன் எடையுள்ள கயிறு, அரை டன் எடையுள்ள துணிகள் முதலியன உபயோகப் படுத்தப்படுகின்றன. முன்புறம் கட்டப் படும் குதிரைகள், யாளி, பிரம்மன் போன்ற பொம்மைகள் மற்றும் நான்கு புறமும் கட்டப்படும் அலங்காரத் தட்டிகள் ஆகியவற்றின் எடை சுமார் 5 டன்னாகும்.

இவை தவிர தேரைச் சுற்றி இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்ற இரும்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, தேரின் எடை சுமாராக 300 டன் எனக் கொள்ளலாம். ஆழித்தேரில் குதிரைகள், பொம்மைகள், அலங்காரத் தட்டிகள் ஆகியவை கூடுதல் 68ஆகக் கட்டப்படுகின்றன. இவ்வாறு தமிழகத்தில் உள்ள தேர்களிலேயே மிகப் பிரம்மாண்ட தேராக ஆரூர் ஆழித்தேர் விளங்குகின்றது.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்