Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அருமனை அருகே பரபரப்பு; இரவு முழுவதும் தண்ணீருக்கு நடுவே பாறையில் உறங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து ஊரெல்லாம் தேடிய தீயணைப்புத்துறையினர்

மகன் மாயமானதை நினைத்து கதறிய பெற்றோரும் வேறு வழியில்லாமல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்களால் தூங்க முடியவில்லை. விடிய விடிய காத்திருந்தனர். அப்போது திடீரென வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதையடுத்து கதவை திறந்த பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், இவ்வளவு நேரம் காணாமல் போனதாக தேடிய தங்களின் மகன் சபின் உயிருடன் நிற்பதை கண்டு மகிழ்ந்தனர். இன்னும் போதை தெளியாத சபின் நடந்த எதுவும் தெரியாமல் சரசரவென வீட்டுக்குள் சென்று தூங்கிவிட்டான். பெற்றோரும் சிறிது கண் அயர்ந்தனர்.

அருமனை: அருமனை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் இறந்ததாக நினைத்து தீயணைப்புத்துறையினர் அவரது உடலை தேடிய நிலையில், வாலிபர் இரவு முழுவதும் ஆற்றின் நடுவே பாறையின் மேல் ஹாயாக உறங்கிவிட்டு உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அருமனை அருகே மணியன்குழி அஞ்சுகண்டறை சானல்கரையை சேர்ந்த ஏசுராஜன். அவரது மகன் சபின் (21). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான ஆதர்ஸ் உள்பட 3 பேர் நேற்று மாலை ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். போதையில் இருந்த 3 பேரும் சபினுக்கு சொந்தமான பைக்கில் மாலை சுமார் 5 மணியளவில் வண்ணான்பாறை அருகே கோதையாற்றின் கரைப்பகுதிக்கு வந்தனர்.

அப்போது அதீத போதையில் இருந்த சபின் ஆற்றில் இறங்கி குளிக்கலாம் வாருங்கள் என்று தனது நண்பர்களை அழைத்து உள்ளார். நண்பர்கள் 2 பேரும் மறுத்துவிட்டனர். இதனால் சபின் மட்டும் குளிக்க ஆற்றில் இறங்கினார். நண்பர்கள் 2 பேரும் கரையில் இருந்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும் நிலையில், நிதானமே இல்லாமல் குடிபோதையில் இருந்த சபின் தள்ளாடினார். ஆனாலும் அவருக்கு கரை திரும்ப மனம் வரவில்லை. நன்றாக குளித்துக்கொண்டிருந்தவர் திடீரென மாயமானார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆதர்ஸ் உள்பட 2 பேரும் பதறியடித்துக்கொண்டு கூச்சலிட்டனர். ஆனாலும் சபின் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இதையடுத்து ஊருக்குள் சென்ற 2 நண்பர்களும் நடந்த விபரத்தை கூறினர். தகவல் அறிந்து சபினுடைய பெற்றோரும் ஓடி வந்தனர்.

அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆற்றங்கரை பகுதிக்கு சென்று சபினை தேடினர். டார்ச் லைட், செல்போனில் டார்ச் லைட் உதவியுடன் பல இடங்களில் தேடினர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகும் சபினை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் நள்ளிரவு சுமார் 1 மணி ஆகிவிட்டது. ஆகவே சபின் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம்? என்று நினைத்த பொதுமக்கள் இனி காலையில் தேடலாம் என்றவாறு தேடும் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர். தீயணைப்புத்துறையினரும் நள்ளிரவு நேரம் என்பதால் வரவேயில்லை. மகன் மாயமானதை நினைத்து கதறிய பெற்றோரும் வேறு வழியில்லாமல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

ஆனால் அவர்களால் தூங்க முடியவில்லை. விடிய விடிய காத்திருந்தனர். அப்போது திடீரென வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதையடுத்து கதவை திறந்த பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், இவ்வளவு நேரம் காணாமல் போனதாக தேடிய தங்களின் மகன் சபின் உயிருடன் நிற்பதை கண்டு மகிழ்ந்தனர். இன்னும் போதை தெளியாத சபின் நடந்த எதுவும் தெரியாமல் சரசரவென வீட்டுக்குள் சென்று தூங்கிவிட்டான். பெற்றோரும் சிறிது கண் அயர்ந்தனர். இந்த விபரம் எதுவும் ஊர் பொதுமக்களுக்கு தெரியாது. இன்று காலை குலசேகரம் தீயணைப்புத்துறையினரும், கடையாலுமூடு போலீசாரும் கோதையாற்றின் அருகே சென்று சபினை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு இடமாக சல்லடைபோட்டு தேடினர். சபினின் நண்பர்கள் 2 பேரும் அங்கு வந்தபோது, ஆற்றங்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த சபினின் பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்த நிலையில் போலீசார் உடனே சபினின் பைக்கை தேடிச்சென்றனர். இதுதொடர்பாக விசாரிப்பதற்காக சபினின் வீட்டுக்கு சென்றனர். அங்கு பார்த்தால் வீட்டு வாசலில் சபினுடைய பைக் நின்றுகொண்டிருந்தது. தொடர்ந்து வீட்டுக்கதவை போலீசார் தட்டிய நிலையில், சபினுடைய பெற்றோர் கதவை திறந்தனர். அவர்கள் சார், எங்கள் மகன் திரும்ப வந்துவிட்டான், இப்போது தூங்கிக்கொண்டிருக்கிறான் எனக்கூறினர். இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார், சபினை எழுப்பி நடந்த விபரத்தை கூறினர். இதைக்கேட்டு குழப்பமடைந்த சபின் உடனே கோதையாற்றின் கரைக்கு ஓடினார். அங்கு சபின் உயிரோடு வந்ததும் சபினுடைய நண்பர்கள் உள்பட அனைவருக்குமே அதிர்ச்சிதான் காத்திருந்தது. இதைக்கண்ட தீயணைப்புத்துறையினரும் அவனே வந்துவிட்டான், இனிமேல் எதற்கு தேடவேண்டும் எனக்கூறினர்.

இதையடுத்து போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து சபினை பிடித்து விசாரித்தனர். அப்போது சபின் கூறியதை கேட்டு இதெல்லாம் எப்புடிடா? என்பதுபோல் இருந்தது. சபின் கூறுகையில், நான் ஆற்றுக்குள் இறங்கி குளித்தபோது குடிபோதையில் எனக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டேன். ஆனால் சிறிது சுயநினைவு இருந்ததால் ஆற்றின் நடுவே உள்ள பெரிய பாறையை கெட்டியாக பிடித்துக்கொண்டு அதன்மீது ஏறினேன். இருட்டாக இருந்ததால் வழி தெரியவில்லை. எனவே பாறையின் மேல் படுத்து உறங்கிவிட்டேன். அதிகாலை சுமார் 4 மணியளவில் சிறிது வெளிச்சம் வந்ததும், போதையும் தெளிந்தது. உடனே மீண்டும் ஆற்றுக்குள் இறங்கிச்சென்று கரை திரும்பினேன்.

பின்னர் எனது பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால் இரவில் பொதுமக்கள் என்னை தேடியபோது எவ்வளவோ கதறியும் எனது காதில் விழவில்லையே என அப்பாவித்தனமாக சபின் கூறினார். இதைக்கேட்டு தலையில் அடித்துக்கொண்ட பொதுமக்கள் நக்கலுடன் சிரித்தனர். போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் சிரித்த முகத்துடனே அங்கிருந்து நடையை கட்டினர்.

ஐயா... நான் சாகல... உயிரோடுதான் இருக்கேன்

சபினுடைய வீட்டுக்குள் சென்ற போலீசார், அடேய் உன்னை காணாமல் நாயாக அலைகிறோம். நீ இங்கு வந்து ஜாலியாக படுத்து உறங்குகிறாயா? எனக்கூறி சபினை எழுப்பினர். பின்னர் நடந்த விபரத்தை கூறியதோடு, உன் உடலை தீயணைப்பு துறையினர் கோதையாற்றின் அருகே தேடிக்கொண்டிருக்கிறார்கள் எனக்கூறினர். இதைக்கேட்டு குழப்பமடைந்த சபின், ஐயோ... நான் சாகவில்லை. குத்துக்கல்லாட்டும் உயிரோடு இருக்கிறேன்... என ஊருக்குள் தண்டோரா போல சத்தமிட்டபடியே கோதையாற்றின் கரைக்கு ஓடிச்சென்றார்.