Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 பேரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி: மேலும் பல தகவல்கள் வெளிவர வாய்ப்பு

பெரம்பூர்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 பேரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் கடந்த மாதம் 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பொன்னை பாலு, அருள் உள்பட 11 பேரை செம்பியம் போலீசார் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்டார். அதன் பிறகு 2வது முறையாக பொன்னை பாலு, அருள், ராமு ஆகிய 3 பேரை மூன்று நாட்களும், ஹரிகரன் என்ற வழக்கறிஞரை 5 நாட்களும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் மேலும் விசாரணை நீண்டு கொண்டே செல்வதால் சிறையில் உள்ள 5 பேரை 7 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரி செம்பியம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். நேற்று மாலை பூந்தமல்லி சிறையில் இருந்து பொன்னை பாலு, அருள், ராமு, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், வழக்கறிஞர் சிவா ஆகிய 5 பேரை போலீஸ் காவலில் எடுக்க எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு மாஜிஸ்திரேட் ஜெகதீசன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் பொன்னை பாலு, அருள் ஆகிய இருவரையும் மூன்றாவது முறையாக போலீஸ் காவலில் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அவர்களுக்கு 3 நாள் போலீஸ் கஸ்டடியும், அதேபோல இரண்டாவது முறையாக போலீஸ் காவிலில் எடுக்கும் ராமு என்ற வினோத்துக்கு மூன்று நாள் போலீஸ் காவலிலும், முதல் முறையாக போலீஸ் காவலில் எடுக்கப்படும் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் என்பவரை ஐந்து நாட்கள் போலீஸ் காவலிலும் விசாரிக்க எழும்பூர் 5வது நடுவர் ஜெகதீசன் உத்தரவிட்டார்.

இதில் வழக்கறிஞர் சிவா, சம்பவ செந்திலின் கூட்டாளி ஆவார். அவர் மூலமாக இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பண உதவி செய்திருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவரது வீட்டை போலீசார் சோதனை செய்தபோது ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே தற்போது இவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது பணம் சம்பந்தப்பட்ட பல்வேறு உண்மைகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று அதிமுக கவுன்சிலர் ஹரிதரனும் முதல்முறையாக விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்தும்போது பல தகவல்கள் கொலையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, தொடர்ந்து தனிப்படை போலீசார் இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.