அரியலூர் மாவட்டத்தில் நெல், உளுந்து, நிலக்கடலை விதை பண்ணை அமைக்கலாம்: விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு
ஜெயங்கொண்டம், நவ.25: அரியலூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் நெல், உளுந்து மற்றும் நிலக்கடலை விதை பண்ணை அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள் விதை பண்ணை அமைத்து விதை உற்பத்தி செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெறலாம். விதை பண்ணை பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் ஆதார நிலை விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலோ அல்லது தனியார் விதை விற்பனை நிலையங்களிலோ வாங்கி அதற்கான ரசீது மற்றும் வெள்ளை நிற சான்ற அட்டைகளுடன் நில பதிவு கட்டணம் ரூ.25 விதை பரிசோதனை கட்டணம் ரூ.80 மற்றும் வயல் ஆய்வு கட்டணம் ஒரு ஏக்கருக்கு ரூ.100 செலுத்தி அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் மூலமாக பெரம்பலூர் விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் விதை பண்ணை பதிவு செய்து கொள்ளலாம்.
அரசு மூலம் விதை பண்ணைகள் அமைக்கும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. விதைப் பண்ணை பதிவு செய்த பயிர்களில் விதைச்சான்று அலுவலரால் பூக்கும் பருவம் மற்றும் முதிர்ச்சி பருவத்தில் வயல் ஆய்வு செய்யப்பட்டு வயல் தரம் உறுதி செய்யப்படும். பின்னர், சுத்திகரிப்பு செய்த விதைகளை விதை பரிசோதனை நிலையத்தால் தரம் உறுதி செய்யப்பட்டு சான்றிப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது. எனவே, ஆர்வமுள்ள விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்து சான்று விதைகளை உற்பத்தி செய்து பயனடையலாம் என பெரம்பலூர் விதை சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குனர் தரணி காமாட்சி தெரிவித்துள்ளார்.

