Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அறுவைசிகிச்சைக்கு உதவும் ஆப்பிள் விஷன் ப்ரோ

நன்றி குங்குமம் டாக்டர்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில், தங்களது புதிய கண்டுபிடிப்பான விஷன் ப்ரோ என்ற மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை வெளியிட்டது. இந்த ஹெட்செட்டை பொழுதுபோக்குத் துறையிலும், ஹெல்த்கேர் துறையிலும் பயன்படுத்தலாம் என அறிவித்திருந்தது. இதனை அறிந்த ஜெம் மருத்துவமனையின் மருத்துவர்கள், இந்த ஹெட்செட்டை மருத்துவத்துறையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆராய்ந்து அதனை முயற்சித்து வெற்றி கண்டுள்ளனர். இது குறித்து, மருத்துவர் ஆர். பார்த்தசாரதி நம்முடன் பகிர்ந்து கொண்டவை.

‘தற்போது ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த விஷன்ப்ரோ கண்டுப்பிடிப்பை ஹெல்த்கேரிலும் பயன்படுத்தலாம் என்று அறிவித்திருந்ததால், இது குறித்து அறிந்து கொள்ள இந்த விஷன் ப்ரோவை வாங்க நினைத்தோம். ஆனால், இந்த கருவி இந்தியாவில் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், அமெரிக்காவிலிருந்து நண்பர் மூலம் வரவழைத்தோம். பின்னர், இந்த கருவியின் பயன்பாடு குறித்து பலவிதங்களில் நன்கு ஆராய்ந்தோம். இது ஒரு 360 டிகிரி ஸ்பேஷியல் கம்ப்யூட்டிங் ஆகும். பல சோதனைகளுக்குப் பிறகு, இந்த தயாரிப்பானது ஆபரேஷன் தியேட்டரில் மிகவும் தேவையான கருவியாக மாறுவதற்கான அனைத்து மேம்பட்ட அம்சங்களையும் கொண்டிருந்ததை அறிந்து கொண்டோம். மேலும், இதன் பயன்பாடு மருத்துவத் துறையில் நிச்சயம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று உணர்ந்தோம்.

எனவே, கடந்த மாதம் சோதனை முயற்சியாக ஒரு பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது இதனைப் பயன்படுத்தினோம். இது 3 டி தொழில் நுட்ப பயன்பாடு கொண்டுள்ளதால், அறுவைசிகிச்சை மேற்கொள்ளும்போது இந்த கருவியை அணிந்து கொண்டதால், உடல் பாகங்களை மிக துல்லியமாகவும், இயல்பாகவும் பார்க்க முடிந்தது. பொதுவாக இதுபோன்ற அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் போது, ஆபரேஷன் தியேட்டரின் உள்ளே அறுவைசிகிச்சை நிபுணர், உதவி அறுவைசிகிச்சை நிபுணர், கேமரா சர்ஜியன் மற்றும் நர்சிங் உதவியாளர்கள் அடங்கிய முழு அறுவைசிகிச்சை குழுவும் ஒரு பெரியளவிலான லேப்ராஸ்கோபி மானிட்டரைப் பயன்படுத்துவோம்.

அந்த மானிட்டரில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும் பாகத்தைத் திரையில் அவ்வப்போது நிமிர்ந்து பார்த்துக்கொள்வோம். ஆனால், இந்தக் கருவி அணிந்து கொண்டதால், திரையை நிமிர்ந்து பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல்போனது. இதனால், இன்னும் விரைவாக அறுவைசிகிச்சையை மேற்கொள்ள முடிந்தது. அதைத் தொடர்ந்து இதுவரை சுமார் ஒன்பது அறுவைசிகிச்சைகள் மேற்கொண்டுவிட்டோம். அனைத்துமே நல்ல வெற்றிகரமாக முடிந்துள்ளன.

மேலும், இது குறித்து எங்கள் மருத்துவமனையின் இணையதளப் பக்கத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம். இதைப் படித்துவிட்டு, மகாராஷ்டிரா கோலாப்பூரிலிருந்து பிரதீப் வருட்டே என்ற மூத்த மருத்துவர் ஒருவர் இந்த தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள, அறுவைசிகிச்சை மேற்கொள்ளும்போது அதனை லைவாகக் காண்பிக்கச் சொல்லியிருந்தார். எனவே, ஒரு அறுவைசிகிச்சையின் போது, விஷன் ப்ரோவின் தொழில் நுட்ப வசதியுடன் நாங்கள் செய்த அறுவைசிகிச்சையை அவர் அங்கிருந்தபடியே பார்த்தார்.

இந்த விஷன் ப்ரோ கருவியின் மூலம், நாம் அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் பகுதியை மிகத் துல்லியமாகப் பார்க்க முடியும். மேலும்,, அறுவைசிகிச்சை மேற்கொள்ளும்போது ஏதேனும் குறிப்பு தேவைப்பட்டால் அதனையும் நாம் இந்த கருவி மூலமே உடனடியாக ஓபன் செய்து பார்த்துக் கொள்ளலாம். அது போலவே மூத்த மருத்துவர்களின் ஆலோசனை ஏதும் தேவைப்பட்டால், அவர்களை, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே இதன் மூலம் வீடியோ கால் மூலம் இணைத்து ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்ளலாம்.

நாம் செய்யும் அறுவைசிகிச்சையை பதிவும் செய்துகொள்ளலாம். இந்த பதிவுகளை 3டி இம்ர்சி முறையில் ரெக்கார்ட் செய்து கொள்ள முடியும். பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவர்களின் பயிற்சி வகுப்புகளுக்காகவும் இதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனால், அவர்கள் இன்னும் தெளிவாகக் கற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியும். அது போன்று புற்றுநோய் அறுவைசிகிச்சையின் போது இதை அணிந்து கொள்ளும்போது, புற்றுநோய் செல்கள் அந்தப் பகுதிகளில் எவ்வளவு தூரம், எவ்வளவு ஆழமாகப் பரவியிருந்தாலும், ஒரு செல்லைக்கூட விட்டுவிடாமல் மிகத் துல்லியமாகப் பார்த்து, சுத்தமாக நீக்கிவிட முடியும். அந்த அளவுக்கு இதன் பயன்பாடு உள்ளது.

அது போன்று இந்தக் கருவியை அணிந்துகொள்வதால், கழுத்து வலியோ, திரும்புவதில் ஏதேனும் பிரச்னையோ இருக்காது. இதை அணிந்து கொண்டதும் அந்த அறை முழுவதையும் அது ஸ்கேன் செய்து நமது கண்களுக்குப் புலப்படுத்தும். அதனால் நாம் சாதாரணமாகப் பார்க்கவும் செயல்படவும் முடியும். பொதுவாக, இந்தக் கருவியை வீடியோ பார்க்கவும் இதனைப் பயன்படுத்தி 3டியில் திரைப்படங்களைப் பார்க்கவும்தான் பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இதை அறுவைசிகிச்சையில் முறையாகப் பயன்படுத்த தொடங்கினால், அறுவைசிகிச்சைகளை மேலும் எளிதாகவும், அடுத்தக் கட்டத்துக்கும் கொண்டுபோக முடியும்’ என்றார்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்