Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாகைச்சாத்து ஏன்?

கோயில்களில் நடைபெறும் நிகழ்வுகளில் அபிஷேகம்-அர்ச்சனை எனப் பல விதங்களிலும் பொதுவாக இருக்கும்.ஆனால் ஒருசில கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், அந்தக் கோவிலுக்கு மட்டுமே உண்டானதாக இருக்கும்.அப்படிப்பட்ட முக்கிய நிகழ்வுகளில் ஒன்று- ‘வாகைச்சாத்து’!வாகைச்சாத்து என்பது, குருவாயூர்-குருவாயூரப்பன் கோவிலுக்கு மட்டுமே உண்டானது.

‘வாகைச்சாத்து’ - என்பது, குருவாயூரப்பனுக்குச் செய்யப்படும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. அறிந்து அனுபவிக்க வேண்டிய அதை அறியலாம். வாருங்கள்!காஷு என்ற வாலிபன்; பெற்றவர்கள் யாரென்று தெரியாது; வறுமையில் இருந்தான்; அனாதையான அவனுக்கு யாரும் ஆதரவு இல்லை; ஏதோ கிடைக்கும் சிறுசிறு வேலைகளைச் செய்து, அதில் கிடைப்பதைக் கொண்டு வயிறு வளர்த்து வந்தானே தவிர, சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றுமில்லை.ஊருக்கு ஓரமாக.ஒரு குடிசையில் இருந்த காஷு, மூன்று நாட்கள் தொடர்ந்து பட்டினி கிடக்கும் நிலை உண்டானது.

வெறுத்துப்போன காஷு, தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற எண்ணத்தில், அருகிலிருந்த நதியில் இறங்கினான்.அப்போது நாரதர் வந்து தடுத்தார்; ‘‘ஏன் இவ்வாறு செய்கிறாய்? தற்கொலை செய்து கொள்வது பாவம்! ஏதோ ஒரு விலங்காக, பூச்சியாக, புழுவாக, மரமாகப் பிறக்காமல் மனிதனாகப் பிறந்திருக்கிறாயே! மனிதப் பிறவி கிடைக்குமா? தற்கொலை எண்ணத்தை விடு! இந்தா!’’ என்று சொல்லி காஷுவின் கையில் ஒரு பாத்திரத்தைக் கொடுத்தார்.அதை வாங்கிய காஷு, நாரதரை மேலும் கீழுமாகப் பார்த்தான்.

நாரதர் தொடர்ந்தார்; ‘‘காஷு! இந்தப் பாத்திரம், உனக்கு வேண்டும் போதெல்லாம் சுவையான உணவைத் தரும்’’ என்று சொல்லி மறைந்தார்.

ஒன்றுக்காக அலைவதும்; அது கிடைத்ததும் இன்னும் வேறொன்றுக்காக அலைவதும் அதற்காகத் தவறான நடவடிக்கைகளில் இறங்குவதும் - மனிதப் புத்தி! காஷு

மட்டும் என்ன விதி விலக்கானவனா?

நாரதர் தந்த பாத்திரத்தை வைத்து நன்றாகச் சாப்பிட்டு வந்த காஷு, அடுத்த கட்டத்திற்குத் தாவினான்; ‘‘நாம் தற்கொலை செய்து கொள்ளப் போகும்போது, நாரதர் வந்து காத்து உதவி செய்தார். இப்போது நமக்கு ஒரு பெரிய மாடமாளிகை தேவை. மறுபடியும் நாம் தற்கொலை செய்துகொள்ள முயன்றால், நாரதர் மறுபடியும் வந்து தடுப்பார். அவரிடம் சொல்லி, ஒரு பெரும் மாடமாளிகையைப் பெறலாம். இதுவே நாம் உடனடியாகச் செய்ய வேண்டியது’’ என்று தீர்மானித்தான். கெட்ட தீர்மானமல்லவா? உடனே நடைமுறைக்கு வந்தது.

காஷு தற்கொலை செய்து கொள்வதற்காக, நதிக்கரை சென்றான்; நாரதர் வருகிறாரா என்று சுற்றுமுற்றும் பார்த்தான்.நாரதர் வரவில்லை. அதற்குப் பதிலாக, அவன் கையிலிருந்த பாத்திரம் மறைந்து போனது. காஷு அதிர்ந்து போனான்; ‘‘நாரதர் வருவார், வேறெதாவது வரம் தருவார் என்று பார்த்தால், நமக்கு உணவளித்து வந்த பாத்திரமும் நம் கையை விட்டுப்போய் விட்டதே! பேராசை பெரு நஷ்டம்!’’ என்று புலம்பினான்.வழக்கப்படி உதவுவார் இல்லாமல் தவித்தான்; ‘‘எனக்கு நானே கெடுதல் செய்து கொண்டு விட்டேன்’’ என்று கண்ணீர் விட்டான் காஷு; முன்பைப் போலவே, ஏதோ கிடைப்பதை வைத்து வயிறு வளர்த்து வந்தான்; பட்டினியும் அவ்வப்போது தலை நீட்டியது.

தன்னிலை உணர்ந்து, வருத்தத்தின் உச்சத்தில் புலம்பிக் கொண்டிருந்த காஷுவின் எதிரில் நாரதர் நின்றார்.‘‘காஷு! போன பிறவியில் உனக்கு சாம்பு என்ற மகன் இருந்தான். மிகவும் நல்லவனான அவன் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறான். அவன் பகவானிடத்தில் அழுத்தமான பக்தி செலுத்தி வந்ததால்தான், நீ என்னைப் பார்க்க முடிகிறது. இங்கே இருந்தபடியே பகவான் திருநாமங்களை உச்சரித்துக்கொண்டு இரு! தகுந்த காலத்தில் பகவான் அருள் உனக்குக் கிடைக்கும்’’ என்று சொல்லி மறைந்தார், நாரதர்.

அதன்படியே காஷு தியானத்திலேயே காலத்தைக் கழிக்கத் தொடங்கினான். என்னதான் இருந்தாலும் பழைய தீவினைகள் வந்து தாக்கியதைப்போல, அவ்வப்போது உடல் நோய்களாலும் மன

நோய்களாலும் கதறினான் காஷு. அந்தக் கதறலைக் கேட்டு லட்சுமிதேவி வருந்தினாள்; பகவானிடம், ‘‘சுவாமி! தங்கள் பக்தன் கதறுவது காதுகளில் விழவில்லையா? குசேலர் வருந்தியபோது, நீங்கள் போய் உதவவில்லையா? போய், இந்தக் காஷுவின் துயரையும் தீர்க்கக் கூடாதா?’’ என வேண்டினாள். பகவான் புன்னகைத்தவாறே, ‘‘தேவி! நீ சொல்லும் அந்தக் காஷு, இன்னும் தனது பாவங்களைத் தீர்த்துக்கொள்ளவில்லை’’ என்று சொல்லிக் காஷுவின் பாவங்களை விளக்கும் முற்பிறவியைச் சொல்லத் தொடங்கினார்.

போன பிறவியில் காஷு ஒரு பூசாரியாக இருந்தான். அப்போது அவனிடம் தெய்வ கைங்கரியங்களுக்காகப் பக்தர்கள் ஏராளமான பொருட்களைக் கொடுத்தார்கள்.

அவர்கள் தந்த பொருட்கள், செல்வங்கள் என எல்லாவற்றையும், காஷு தன் விருப்பப்படித் தவறான செயல்களுக்கே உபயோகித்தான்; தெய்வத் தொண்டிற்காக ஏதும் செலவழிக்க வில்லை. (காஷு செய்த தவறான செயல்களையெல்லாம் மூல நூல் விரிவாகப் பட்டியலிடுகிறது.)

காஷுவிற்குச் சாம்பு என்றொரு மகன் இருந்தான். அந்தச் சாம்பு தலைசிறந்த பக்தன்; எந்நேரமும் பகவான் தியானத்திலே நிலை பெற்றிருந்தான்; ஒழுக்க சீலனாகவும் திகழ்ந்தான்.

அதைக் கண்டும் காஷு திருந்தவில்லை. அவன் தவறான நடத்தைகளாலும் அலட்சியத்தாலும் கோவில், சிதிலமடைந்து சீரழிந்தது. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவரவர்கள் வாயை மூடிக்கொண்டு மௌனமாகவே இருந்து விட்டார்கள். அடியார்களின் மனக்குமுறல் வடிவம் கொண்டதைப்போல, காஷுவின் மகனான சாம்பு இளைஞனானதும், கோவிலின்

நிர்வாகப் பொறுப்பை ஏற்றான்.

சாம்புவின் ஒழுக்கத்தாலும் நன்னடத்தையாலும் ஆலயம் பழையபடியே சீரும் சிறப்புமாக ஓங்கத்தொடங்கியது. அந்தச் சாம்பு எந்நேரமும் பகவான் தியானத்திலேயே இருந்தான். அதன் காரணமாகவே அவன் சொர்க்கத்தை அடைந்தான்.எந்த நிலையிலும் திருந்தாத-திருந்த வேண்டும் என்ற எண்ணமே இல்லாதிருந்த காஷு, தொடர்ந்து செய்த பாவங்களாலும் ஒழுக்கக் கேட்டினாலும், வியாதி வந்து இப்பிறவியில் துயரங்களை அனுபவித்தான்.

காஷுவின் இவ்வாறான முற்பிறவிக் கதையைச் சொல்லி முடித்த பகவான், லட்சுமிதேவியின் வற்புறுத்தலுக்கு இணங்கி, காஷுவின் முன்னால் நின்றார். அவர் வந்த நேரம், காஷு தன் நிலையிழந்து கீழே விழுந்து கிடந்தான். அவன் நிலையைப்பார்த்த பகவான், காஷுவின் தலையை மெள்...ளத் தடவிக் கொடுத்தார். அதே விநாடியில் காஷு, தெளிவு பெற்று உற்சாகத்துடன் எழுந்தான்.பகவான் திருக்கரங்கள் தீண்டியிருந்ததால், காஷூ மனம் திரும்பினான்; திருந்தினான்; பகவானை வணங்கிக் கைகளைக் கூப்பி, ‘‘பகவானே! அடியேனை உன் திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். என்னைப்போலத் துன்பம் அனுபவிப்பவர்களுக்கு, ஏதாவது ஒரு வகையில் நான் உதவியாக இருக்க வேண்டும். அதற்குத் தாங்கள் அருள்புரிய வேண்டும்’’ என்று வேண்டினான்.

அதை ஏற்றார் பகவான்; ‘‘கலியுகத்தில், நீ ஒரு வாகை மரமாகப் பிறப்பாய். அப்போது நான் குருவாயூர்க் கோயிலில் தெய்வமாக இருப்பேன். ஒவ்வொரு நாளும் காலையில் எனக்குத் தைல அபிஷேகம் நடந்தவுடன், வாகைத்தாளால் (வாகை இலைக் கொப்பினால்) தான் சுத்தம் செய்வார்கள். அந்த வகையில் நீ எனக்குச் சேவை செய்தவனாக ஆவாய்.

‘‘உடம்பில் ஏற்படும் தோல் வியாதிகள், அந்த வாகைத் தைலத்தின் மூலம் தீரும்’’ என்று அருள்புரிந்தார்.அதன் காரணமாகவே, குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் ‘வாகைச்சாத்து’ என்பது நடைபெறுகிறது. அங்கே அளிக்கப்படும் வாகைச்சாத்து தைலம்-பல விதமான தோல் நோய்களைத் தீர்ப்பது கண்கூடு.வாகைச்சாத்து என்ற இந்நிகழ்வு பலவிதமான படிப்பினை களை உணர்த்துவதுடன், ஆரோக்கியத்தையும் உணர்த்துகிறது.

V.R.சுந்தரி