Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரத்தசோகையும் ஆயுர்வேதத் தீர்வும்!

நன்றி குங்குமம் டாக்டர்

ரத்தசோகை உலகளவில் மிகவும் பொதுவான ஒரு ஊட்டச்சத்து நோயாகப் பார்க்கப்படுகிறது. இது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை பாதிக்கிறது.வசதி படைத்த நாடுகளில் இதன் பாதிப்பு குறைவாக இருந்தாலும், நம் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் பின்தங்கிய சமூகப் பொருளாதாரநிலை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய காரணங்களால் இதன் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

இன்று இந்தியாவில் 58.6 சதவீத குழந்தைகள் (62 சதவீத பெண் குழந்தைகள்) அதிலும் குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளில் 48.5 சதவீதம் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளின்றி வளர்வதால் அவர்களின் உடல் வளர்ச்சி மாறுபாட்டின்போது போதிய சத்தின்றி உடல்நலம் குன்றி காணப்படுவதுடன் பூப்பெய்தியவுடன் மேலும் பல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டில் மட்டும், 53.2 சதவீத கர்ப்பிணி அல்லாத பெண்கள் மற்றும் 50.4 சதவீத கர்ப்பிணிப் பெண்கள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே தெரிவித்துள்ளது.ரத்தசோகை நோய் கர்ப்பகாலத்தில் இறப்பு அபாயத்தை இரட்டிப்பாக்கி அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குறைப்பிரசவத்திலும் குறைவான எடையுடனும் பிறக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. அந்தக் குழந்தைகளும் பிற்காலத்தில் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதித்து, பள்ளியில் செயல்திறன் குறைந்து பல்வேறு தொற்று நோய்கள் வர எளிதில் வழிவகுக்கிறது.

இது பெரியவர்களையும் பாதித்து அவர்கள் உடல் திறனைக் குறைத்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் வரை (7.8 லட்சம் கோடி) இழப்பை ஏற்படுத்தும் என ஒரு ஆய்வு கூறுகிறது. இது 2018 - 19 இல் சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான இந்தியாவின் பட்ஜெட்டைவிட ஐந்து மடங்கு அதிகம் என்று புள்ளிவிவரத்திலிருந்து இந்நோயே தனிமனித உடல் ஆரோக்கியத்தை மட்டும் பாதிக்காமல் ஒருநாட்டின் பொருளா தாரத்தையே எவ்வாறு பாதிக்கின்றது என்பதை நாம் அறியலாம்.

ரத்தசோகை என்பது ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கையில் குறைவதாகும். ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம்தான் ஹீமோகுளோபின். இதில்தான் இரும்புச்சத்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின்தான் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது.உடலில் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால், திசுக்கள் மற்றும் தசைகள் திறம்பட செயல்பட போதுமான ஆக்ஸிஜனைப் பெற முடியாது. இதனால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும்.

ஆயுர்வேதத்தில் ரத்தசோகையானது பாண்டுரோகம் என்று அழைக்கப்படுகிறது. பாண்டு என்பதன் பொருள் வெளிறிக் காணப்படுதல் என்பதாகும்.ரத்தசோகையில் உடலானது வெளிறிக்காணப்படுவதால் பாண்டுவுடன் ஒப்பிடப்படுகிறது. ரத்தசோகை உடலின் அக்னியை சமநிலையற்று தாக்குகிறது.

காரணங்கள்

உணவில் இரும்புச்சத்து குறைபாடு, ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைபாடு, வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை, ரத்த சிவப்பணுக்கள் அதிகளவில்அழிக்கப்படுதல், குடல் அழற்சி நோய்கள் (வயிற்றில்அல்சர் மற்றும் கட்டிகள், வயிற்றிலோ, குடலிலோ ஏற்படும் புற்றுநோய்), அதிக மாதவிடாய் ரத்தப்போக்கு,உடற்திரவத்தின் அளவு அதிகரித்தல்,பிறப்பிலிருந்தே அல்லது பரம்பரையாக பாதிக்கப்படுதல், வைட்டமின் குறைபாடு, உணவின்றி வாடுதல், அடிபடுதல், தீக்காயங்கள், சிறுநீரகக் கோளாறுகள்,மண்ணீரல் நோய்கள்,வைரஸ்

மற்றும் பாக்டீரியா தொற்று,அதிகளவு புளிப்பு, உவர்ப்பு சுவையுடையஉணவுகளைஎடுத்தல்எளிதில்செரிமானமாகாதஉணவுகளை அதிகமாகஎடுத்தல் ஆகியவை ரத்தசோகையின் முக்கிய காரணங்களாகும்.

வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அவை காலப்போக்கில் வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தலாம். பிரசவத்தின்போது ஏற்படும் அதிக ரத்த இழப்பு பெண்களுக்கு ரத்த சோகையை ஏற்படுத்தலாம்.குடலில் கொக்கிப்புழு உள்ளவர்களுக்கு வெளியில் தெரியாத வகையில் ரத்தமிழப்பு ஏற்பட்டு ரத்தசோகை வரலாம்.ஒரு கொக்கிக் புழு தினமும் 0.3 மி.லி. ரத்தத்தை உறிஞ்சுகிறது.

சாதாரணமாக ஒருவருக்கு 300 கொக்கிப்புழுக்கள் வரை இருக்கலாம். அதாவது 90.மி.லி ரத்தம் வரைதினமும் குடல்புழுக்களால் நாம்இழக்கலாம்என்றகணக்கு

ரத்தமிழப்பின் தீவிரத்தை உணர்த்தும்.

ரத்த சோகையின் வகைகள்

ரத்தசோகை என்னும் பாண்டுரோகமானது வாதம், பித்தம், கபம், சன்னிபாதம், ம்ருத்பக்ஷணஜன்யபாண்டு (மண்ணை உண்பதால் ஏற்படக்கூடிய பாண்டு) என பிரிக்கப்படுகிறது. நவீன மருத்துவத்தில் மேக்ரோஸிட்டிக், மைக்ரோ சைட்டிக், நார்மோசைடிக் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ரத்தப்பரிசோதனையில் இரும்புச்சத்துக் குறைபாடு முடிவுகளின் அடிப்படையில் வைக்ரோசைடிக் அனீமியா வேறுபடுத்தப்படுகிறது.

மேக்ரோசைடிக் அனீமியா பி-12, ஃபோலேட். மெத்தில் மலோனிக் அமிலம் மற்றும் ஹோமோசைஸ்டீன் அளவுகள் மற்றும் சில சமயங்களில் தைராய்டு நோய் இருப்பதன் அடிப்படையில்மதிப்பிடப்பட்டுவேறுபடுத்தப்படுகிறது. நார்மோசைடிக் அனீமியாவை ஹீமோலிசிஸ்ரத்த இழப்பு அல்லது எலும்புமஜ்ஜை சிவப்பு அணு உற்பத்திகுறைதல் ஆகியவற்றின் விளைவாக வகைப்படுத்தலாம்.

அறிகுறிகள்

முகம், நகங்கள், உள்ளங்கை மற்றும் கண்கள் வெளிறிக் காணப்படும்.நோய் தீவிரமடையும் பட்சத்தில் உடலே வெளுத்துக் காணப்படும். ரத்தத்தில் பித்தம் அதிகரித்து ரத்தம் சீர்கேடு அடைவதால் மயக்கம், உடற்சோர்வு, தலைவலி, படபடப்பு, சீரற்ற இதயத்துடிப்பு, நெஞ்சுவலி, மூச்சுவிடுவதில் சிரமம், நினைவாற்றல் பாதிப்பு, கை கால்களில் வீக்கம், பசியின்மை, சுவையின்மை, நெஞ்செரிச்சல், வாந்தியெடுத்தல், உணவின் மீது வெறுப்பு, செரிமானக்கோளாறுகள், அதிகளவு வியர்த்தல், நாக்கு உலர்ந்து போவது, நாக்கு வீக்கம், உடையக்கூடிய நகங்கள் ஆகியவை பொதுவான அறிகுறிகள்.

மேலும் உடல் கனத்தது போல் உணர்வு, உடலை அழுத்துவது போல் உணர்வு, உடல் சூடுபிடித்ததுபோன்ற உணர்வு, கண்களைச் சுற்றி வீக்கம், முடி உதிர்தல், எளியகாரணங்களுக்காககோபம், எரிச்சல்படுவது, குளிர் மீது வெறுப்பு, படிகளில்ஏறும்போதுமூச்சுத்திணறல்,மண், சுண்ணாம்பு ஆகியவற்றை உண்ண விரும்புதல் ஆகிய அறிகுறிகள்காணப்படலாம்என்றுஆயுர்வேதம் கூறுகிறது.

ரத்த சோகைக்குசரியானநேரத்தில் சிகிச்சை அளிக்காதது இதயம்மற்றும்நுரையீரல்பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

கண்டறிதல்

ஆயுர்வேதத்தில் பாண்டு எனப்படும் ரத்தசோகையானது நோயின் அறிகுறிகளை கொண்டு கண்டறியப்படுகிறது. நவீன மருத்துவத்தில் ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் அளவினை கொண்டும் அறிகுறிகளின் மூலமும் அறியலாம். சராசரியாக ஹீமோகுளோபின் அளவானது ஆண்களில் 13.5 கி% - 17.5 கி% மற்றும் பெண்களில் 2கி% - 16 கி% வரை காணப்படும்.

சிகிச்சை

பாண்டு எனப்படும் ரத்தசோகைக்கான பொதுவான சிகிச்சைகளாவன. உடலை சுத்தி செய்யக்கூடிய, ரத்தத்தினை அதிகரிக்கக்கூடிய, செரிமான சக்தியை அதிகரிக்கக்கூடிய மருந்துகளை

கொடுப்பதாகும்.

பஞ்சகர்ம சிகிச்சை

உடலைச் சுத்தி செய்தபின் உள்மருந்துகளை கொடுப்பதே ஆயுர்வேத சிகிச்சையின் அடிப்படையாகும்.அதன்படி வமனம், விரேசனம், நஸ்யம் முதலிய சிகிச்சைகள் நல்ல பலன் தரும். விரேசனத்திற்கு திருவ்ருத் லேகியம், கல்யாணக குலம் ஆகியவையும், ஜீமுதகம் நஸ்யத்திற்கும் கொடுக்கலாம்.கஷாய மருந்துகளான, கரும்பிரும்பாதி கஷாயம்,புனர்நவாதி கஷாயம்,வாசா குடூச்சியாதி கஷாயம் நிம்புதுவக்காதி கஷாயம், திராக்ஷாதி ம்ருதவிகாதிகஷாயம், பாரிபத்ரசமூல கஷாயம், கைடர்யாதிகஷாயம், முஸ்தாகரஞ்சாதிகஷாயம் ஆகியமருந்துகளைநோய் காரணத்திற்குஏற்பகாலை,மாலைஉணவிற்குமுன் கொடுக்கலாம்.

சூரண மருந்துகளான விடங்க சூர்ணம், பிருங்கராஜ சூர்ணம், கைடர்யாதி சூர்ணம், மாசிக்காய் சூர்ணம், புஷ்யானுக சூர்ணம், அஜாஜி பாடதி சூர்ணம் ஆகியவற்றை கஷாயத்துடன் மேல்பொடியாக கொடுக்கலாம்.லேகியம் மற்றும் ரசாயன மருந்துகளான த்ரக்ஷதி லேகியம், மாணிபத்ர குலம், த்ரிவ்ருத் லேகியம், சிஞ்சாதி லேகியம், தசமூல ஹரிதகி லேகியம், கோமூத்ர ஹரிதகி லேகியம், சரபுங்க வில்வாதி லேகியம், கல்யாணக குலம் பிரம்ம ரசாயனம், குடபிப்பலி, தந்தி ஹரிதகி லேகியம் ஆகியவை நல்ல பலன் அளிக்கும்.

ரத்தசோகையுடன் வீக்கம்காணப்பட்டால்புனர்நவாஷ்டக பானீயம், தசமூல பானீயம்,அர்த்த வில்வ பானீயம் ஆகியவற்றை 500 மி.லி. அளவில் அடிக்கடி எடுக்கலாம். அயபத்ர புனர்னவம் அல்லது அயபத்ர குடூச்சியை தேனுடன் சேர்த்து கொடுக்கலாம்,

மோரின் முக்கியத்துவம்

பாண்டு எனப்படும் ரத்தசோகையில் மோர் சிறந்த மருந்தாகும். மோருடன் பிருங்கராஜ சூர்ணம் சேர்த்து கொடுக்கலாம். வ்யோஷாதி தக்ரம், புனர்னவாதி தக்ரம் முதலிய மோரினால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் நல்ல பலனளிக்கும்.

பின்பற்ற வேண்டியவை

முருங்கை, ஆரைக்கீரை, புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை அகத்தி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி போன்ற கீரை வகைகளையும், கறுப்புதிராட்சை, பேரீச்சை, உலர்ந்ததிராட்சை நெல்லிக்கனி, நாவல், இலந்தை, பப்பாளி, அத்தி, மா, பலா, சப்போட்டா, ஆப்பிள் தக்காளி போன்ற பழங்களையும் தினமும்கொடுத்துவருவதுநல்லது.இதனால் ரத்தம் விருத்தி அடைந்து, ரத்தச் சோகை நீங்கும்.

மேலும் பட்டாணி, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, நிலக்கடலை, உளுந்து அவரை, துவரை, சிவப்பு அவல், கேழ்வரகு, கம்பு, சோளம்,தினை, எள், வெல்லம், சுண்டைக்காய்,பொட்டுக்கடலை, பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, பால்,கேரட், பீட்ரூட், சோயாபீன்ஸ், காலிஃபிளவர்ஆகியவற்றைகொடுக்கலாம். முட்டையும், ஈரலும், சிவப்பு இறைச்சியும் இரும்புச் சத்துள்ள முக்கிய உணவுகளாகும்.

தொகுப்பு: உஷா நாராயணன்