Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமிர்தவர்ஷிணி யோகம்!

கிரகங்களின் இணைவுகளே யோகங்களாகவும், தோஷங்களாகவும் வெளிப்படுகின்றன. இந்த அமைப்பின் படி, சந்திரன் - சுக்கிரன் இணைவு அன்பையும், அழகையும் வெளிப்படுத்தும் யோக அமைப்பாகும். இந்த கிரகத்தின் இணைவை உணர்வுப்பூர்வமாக உணர்வதே சிறப்பு. இந்த கிரகத்தின் இணைவு தன யோகம் என்றும், மழை யோகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது எதையும் அனுபவிக்கும் யோகம் ஆகும். இந்த கிரக இணைவில் ஒரு சிறப்பும் உண்டு. அதாவது, சந்திரனாகிய மாதுர்காரகன் சுக்கிரன் வீடாகிய ரிஷபத்தில்தான் உச்சபலம் பெறுகிறார் என்பதாகும். சந்திரன் - சுக்கிரன் இணைவு சுபத்தன்மையான யுத்த அமைப்பாகும்.

இசையின் ராகங்களில் சந்திரன் சுக்கிரன் இணைவு

ராகங்களை, கிரகங்களோடு ஒப்பிடும் போது, அதனை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அனுபவ நிகழ்வோடு எடுத்துக் கொள்வோம். இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள், ஒரு மே மாத காலத்தில், ``தூங்காத விழிகள் ரெண்டு...’’ என்ற பாடலை, முழுவதும் ரெக்கார்டிங் செய்து முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்த பொழுது, மழை கொட்டுகிறது. அப்போது, அவர்கள் அந்த பாடலுக்கு எடுத்துக் கொண்ட ராகம் அமிர்தவர்ஷிணி. இந்த அமிர்தவர்ஷிணி ராகமானது சந்திரன் - சுக்கிரன் இணைவை குறிக்கும். மழையின் ராகம் ஆகும். பாடல் பாடியதால் மழை வந்ததா? மழை வருவதற்காக இந்த பாடல் பாடப்பட்டதா? என்ற கேள்விகள் எழுகின்றது. ``மழைக்கொரு தேவனே...’’ என்ற பாடலும் அமிர்தவர்ஷிணி ராகத்தில் அமைந்த பாடலாகும்.

பங்குனியில் மாரியம்மன் திருவிழா ஏன்?

சுக்கிரன் என்றாலே மாரி. மாரி என்று நாம் நினைக்கும் தருணத்தில் அங்கு மாரியம்மன் பிரசன்னம் ஆகிறார். மாரியம்மன் என்றாலே மழைதான். சூரியன், பங்குனி மாதத்தில் மீனத்தில் வீற்றிருக்கிறார். அங்கு சுக்கிரன் உச்ச பலத்தில் இருக்கிறார். பங்குனி மாதத்தில்தான் சூரியனும் உச்ச பலம் பெற பயணிக்கும் காலமாகும். இக்காலத்தில், சுக்கிரன் அஸ்தங்கம் பெறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு. அவ்வாறு அஸ்தங்கமாகும் போது அதிக வெப்பத்தின் காரணமாக, அதற்குரிய நோயாகிய அம்மை நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. சுக்கிரன் நம்முடைய தேகத்தின் சருமத்திற்கு காரகமாக விளங்குகிறார். அச்சமயம், மாரியம்மன் என்ற மழை தேவதைக்கு வழிபாடு செய்தால், நற்பலன்களை வழங்குவாள் என்பது காலம் காலமாக இங்கு பின்பற்றும் நடைமுறை அனுபவம். இக்காலத்தில், மாரியம்மனுக்கு பூச்சொரிதல் மற்றும் பால்குட கரகம் எடுத்து வழிபட்டு அம்மனின் வெப்பத்தை தணித்தால், மழை உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

புராணத்தில் மாரியம்மன்

கம்சன் தன் தங்கையின் எட்டாவது மகனால்தான் தன்னுயிர் பிரியும் என்று அசரீரியை கேட்டு, தன் தங்கையையும் அவளின் கணவர் வாசுதேவரையும் சிறை வைக்கிறான். ஒவ்வொரு குழந்தையாக பிறக்க பிறக்க எல்லாவற்றையும் கம்சன் கொலை செய்கிறான். அவ்வாறு எட்டாவதாக கிருஷ்ணர் அவதாரம் எடுக்கிறார். அக்குழந்தையை காப்பாற்ற ஏற்கனவே திட்டமிட்டபடி, கிருஷ்ணரை தன் நண்பர் நந்தகோபன் - யசோதா தம்பதியிடம் ஒப்படைத்துவிட்டு, அங்கு அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையை சிறைக்கு கொண்டு வருகிறார். வழக்கம்போல கம்சன் அந்த குழந்தையின் காலை பிடித்து சுவரில் அடிக்கிறான். அக்குழந்தை வானில் பறந்து காட்சி கொடுத்து மறைகிறாள். அவளே மாரியம்மன் என்ற மாயா தேவி ஆவாள்.

மழையும் சந்திரன் சுக்கிரன் இணைவும்

மழை மேகம் கண்டால், மயில் தன் தோகை விரித்தாடும் அழகை நாம் கண்டுள்ளோம், படித்துள்ளோம். மழை மேகத்திற்கும், மயிலிற்கும் அவ்வளவு இயற்கையான பிணைப்பு உள்ளது. மயில் சுக்கிரனின் அம்சம் எனவும் கூறலாம். அழகிய தோகை அசைந்தாடும் அழகு என எடுத்துக் கொண்டால், மயில் சுக்கிரனின் காரகமாக வருகிறது. சந்திரன் என்பதை நீர் திவலைகள் என கொண்டால், அந்த நீர் திவலைகளை சேர்த்து மழையாக மாற்றும் தன்மை சுக்கிரனுக்கே உரியதாகும்.

ஜாதகத்தில் சந்திரன் - சுக்கிரன் இணைவு உள்ளவர்கள்

*சுக்கிரனை அழகிய பெண்ணாகவும், சந்திரனை தாயாகவும் கொண்டால், தாயைப் போல உணர்வுத் தன்மை உடையவர்களாக இருப்பர். அன்பும் பண்பும் நிறைந்த அமைப்புடையவர்கள். பொருள் (செல்வம்) ஈட்டும் கலையை இவர்கள் நன்கு அறிந்தவர்கள் என்றால் அது மிகையில்லை. ஆனால், சேமிக்கும் மனோபாவம் இவர்களிடம் இருக்காது. காரணம், ஈகை குணமும் தன்னை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கும்.

*மிகுந்த மெல்லிய மனம் உடையவர்களாக இருப்பர். ஆம், சிறிய விஷயத்திற்குக்கூட உணர்ச்சி மிகுதியாக காணப்படுவார்கள்.

*தன்னை நாடி வருபவர்கள் ஏன் வந்துள்ளனர், எதற்காக வந்துள்ளனர், என்பதனை முன்கூட்டியே உணரும் சக்தி உடையவர்கள் இவர்கள். நுட்பமான உணர்வினை, பேச்சினை வலிமையாக உணர்ந்து சொல்லக்கூடிய மனோபாவம் உள்ளவர்கள். தன்னை நாடி வந்தவர்களுக்கு தாயைப்போல வழிகாட்டும் மனம் உடையவர்கள். இந்த இணைவு உள்ளவர்கள் வீட்டில் கண்டிப்பாக ஆசிரியர் இருப்பர்.

*சந்திரன் - சுக்கிரன் பகை கிரகங்களாக இருந்தாலும், சுபத்தன்மை உடையவர்கள். ஆதலால், இவர்கள் சில நேரங்களில் தன் தாயிடம் கருத்து வேறுபாடு உடையவர்களாகவும் சில நேரங்களில் தாயிற்கு பணிவிடை செய்பவர்களாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்ட கிரக இணைவு உள்ளவர்கள் புரிந்துகொள்ள முடியாத குணம் கொண்டவர்கள். ஆனால், மென்மையானவர்கள். கொஞ்சம் அதிர்ந்தாலும் கண்ணில் நீர் வந்துவிடும் இவர்களுக்கு.

*கலைத்துறைக்குள் அதாவது, சினிமாத் துறைக்குள் நுழைய விருப்பம் உள்ளவர்கள். கலைநயம்மிக்க பொருட்களில் சேகரிப்புத் தன்மை உண்டு. சிலர் நாணயங்களையும் சிலர் தபால் தலை சேமிப்பு செய்பவராகவும் இன்னும் சிலர் அரிசியில் பல வடிவங்களை செதுக்கிய பொருட்களை சேமிப்பவராகவும் இருப்பர்.

*பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள், உடலில் உள்ள நுண்சுரப்பிகள் மற்றும் ஹார்மோன்களில் பிரச்னைகள் உருவாகும்.

சந்திரன் - சுக்கிரன் இணைவிற்கான பரிகாரங்கள்

*இந்த பரிகாரங்கள் யாவும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பான நற்பலன்களைத் தரும்.

*பச்சரிசியில் மாவு விளக்கு செய்து அம்மனுக்கு தீபம் ஏற்றுதலும் நற்பலன்களை வழங்கும்.

*மாரியம்மன் கோயிலில் இரவு தங்கி, காலையில் அங்கு நீராடி அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு தானம் வழங்குதல் சிறப்பான பலனைத் தரும்.

*மழைநீரை பாத்திரங்களில் பிடித்து வைத்து பரிகாரம் செய்யலாம். இது அவரவரின் சுய ஜாதகங்களுக்கு ஏற்றவாறு செயல்படுத்திக் கொள்ள வேண்டும்.