ஆயிரம் திருநாமங்கள் கொண்டவள் அம்பிகை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருள் கொண்டு நம்மை வழி நடத்தவல்லவை. அதில் ஒன்று ‘அபர்ணா’ என்ற மிக அழகிய திருநாமமாகும். பாஸ்கரராயர் என்ற மகாராஷ்டிர மாநிலத்தில் அவதரித்து தலைசிறந்த தேவி உபாசகராக விளங்கி வந்தார். அவர் அம்பிகையின் ‘ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமங்களுக்கு’ பொருளுரை எழுதியுள்ளார். சமஸ்கிருத மேதையான அவர், தேவியின் திருநாமங்களைக் கூறும் போது அம்பிகையுடன் உரையாடும் உணர்வுடன்தான் கூறுவார். அப்போது சரபோஜி மன்னர்கள் தமிழ்நாட்டில் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த காலம் அது. பாஸ்கர ராயரின் மேதாவிலாசத்தைக் கேள்வியுற்ற மன்னன், அவரைத் தனது அரண்மனையிலேயே ஆஸ்தானப் பண்டிதராக இருக்கும்படி
கேட்டுக்கொண்டார்.
பாஸ்கர ராயரும் மன்னவரின் அன்புக்கு உட்பட்டு ஆஸ்தான பண்டிதராகப் பதவியேற்றுக் கொண்டு, மனைவியோடு மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். காலம் கடந்தது.ஆனால், அந்த அரண்மனையில் இருக்க அவருக்கும் பிடிக்கவில்லை. சுயமரியாதையை இழந்தவர்போல் இருந்தார். ராஜாங்க யோகம், சுகபோகம், ஒருவருக்குப் பணிந்திருப்பது, குற்றவேலுக்குப் அடிமைப்படுதல் இவையெல்லாம் பாஸ்கர ராயரை ஒரு கைதி போல் உணரச் செய்தது. சரபோஜி மன்னரிடம் தம்முடிவைக் கூறிவிட்டு தனியே சிறியதோர் வீட்டில் தன் மனைவியுடன் இல்லறம் நடத்தினார்.
தினமும் அம்பிகையின் எதிரில், அமர்ந்து இனிய குரலெடுத்து ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தை மனமுருகிப் பாடி வழிபடுவார். ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தில் ‘‘மகா ராக்னி’’ என்றும்‘‘ஸ்ரீ மத் சிம்மாசனேஸ்வரி’’ என்றும் அம்பிகையின் திருநாமங்கள் வரும்போதெல்லாம் மனம் உருகி, மிகவும் வருத்தத்தோடு, ‘‘தாயே, இந்த ஏழையின் வீட்டில் இருக்கும் உனக்கு எப்படி சிம்மாசனம் கிடைக்கும்? உன்னால் எப்படி ராஜமாதாவைப் போல் அமர்ந்துகொள்ள முடியும்? வறுமையில் வாடும் நான் உனக்கு எப்படிப் பட்டாடைகள், அணிமணிகள் பூண்டு அழகு பார்க்க முடியும்?’’ என்று தினமும் வருந்துவார். தன் இயலாமையை அம்பாளிடம் சொல்வார்.
எப்படியாவது நம் எண்ணங்களையெல்லாம் நிறைவேற்ற வேண்டும். அம்பிகையை அலங்கரித்து அழகு பார்க்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தார். ஒருநாள் அவ்வூரில் உள்ள தனவந்தர் ஒருவரிடம் வட்டிக்கு பெருந்தொகை வாங்கி, தாம் எண்ணியபடியே அம்பிகைக்கு அழகிய சிம்மாசனமும், அழகிய தங்கமாலை ஒன்றும், முத்துக்கள் பதியப் பெற்ற அழகிய கிரீடமும் செய்து, பல வண்ணப் பட்டாடைகள் வாங்கி உடுத்தி அம்பிகையை அழகு பார்த்துப் பார்த்து மகிழ்ந்து போனார், பாஸ்கர ராயர். பல மாதங்கள் ஓடிவிட்டன. அம்பிகை, ராஜராஜேஸ்வரியை பல விதமாக அலங்கரித்து, அழகு பார்த்துப் பார்த்து, மகிழ்ந்துகொண்டிருந்த பாஸ்கர ராயருக்கு, அதற்காக வாங்கிய கடனைப் பற்றிய நினைவே வரவில்லை. அதுநாள் வரை உரிய வட்டியையும் அவர் கொடுக்கவில்லை.
ஆனால், கடன் கொடுத்த தனவந்தருக்குப் பொறுமை போய்விட்டது. கோபம் அளவில்லாமல் மூண்டது. பாஸ்கர ராயரின் வீட்டின் முன்னால் நின்றுகொண்டு தெருவே கூடிவிடும் அளவிற்கு கடுமையான வார்த்தைகளால் ராயரைத் திட்டினார்கள். அந்த சமயம், பாஸ்கர ராயர் அம்பிகைக்கு ஸ்ரீலலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்.
அம்பிகையின் ஆயிரம் ராமங்களில் ஒன்றான ‘அபர்ணா’ என்ற திருநாமம் வந்தபோது, மனம் கலங்கி, கண்ணீர் வடித்தபடி, ‘‘அம்மா, தாயே, அம்பிகையே, உனக்கு எதற்கு ‘அபர்ணா’ என்ற திருநாமம்?’ உன்னை வேண்டி நிற்போரின் கடனைத் தீர்த்து வைப்பவளும், உன் பக்தர்களைக் கடனாளியாக இல்லாமல் பார்த்துக் கொள்பவளும் என்ற பொருள்கொண்ட ‘அபர்ணா’ என்ற ‘ஆபத்சகாய நாமம்’ உனக்கு எதற்கு? தாயே, எனக்கு இந்த அவமானம் ஏற்பட்டதால் நான் இனிமேல் உனக்கு அர்ச்சனை செய்வதை நிறுத்திவிடுவேன்!’’ என்று அம்பிகையைப் பார்த்துக் கூறியபடியே கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார், பாஸ்கர ராயர்.
வீட்டிற்கு வெளியே நின்று திட்டிக்கொண்டிருந்த தனவந்தரைப் பார்த்து பணிவுடன், ‘‘ஐயா, தயவு செய்து கோபப்படாதீர்கள். பொறுத்தருளுங்கள். மகாராஷ்டிராவில் என் மனைவியின் பங்காக கொஞ்சம் நிலமிருக்கிறது. அவளது அண்ணனிடம் விவரத்தைக் கூறி, நிலத்தை விற்றுப் பணத்தைக் கொண்டு வரச்சொல்லுகிறேன். இன்னும் கொஞ்ச நாட்கள் அவகாசம் கொடுங்கள். விரைவில் உங்கள் கடனை அடைத்துவிடுகிறேன்!’’ என்றார். வேறுவழியில்லாமல் தனவந்தரும் அவ்விடத்தை விட்டகன்றார். நாட்கள் கடந்தன.
நிலத்தை விற்றுப் பணத்தோடு வருவதாகச் சென்ற மனைவி இன்னும் வரவில்லை. தினமும் விழிமேல் விழிவைத்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் பட்டுப் புடவை சலசலக்க, தனவந்தரின் மனைவி வேகமாக வந்தவள். பாஸ்கர ராயரின் கால்களில் விழுந்து, கண்கள் நீரைப் பொழிய இருகரம் கூப்பி வணங்கியபடி, ‘‘ஐயா! இன்று காலையில் உங்கள் மனைவி ஊரிலிருந்து நேராக எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். நீங்கள் வாங்கிய கடனை வட்டியும் முதலுமாக மொத்தமாக அடைத்துவிட்டார்கள். வெகுதூரம் நடந்து வந்த களைப்பால் எங்கள் வீட்டில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள். என் கணவர் உங்களை மரியாதையில்லாமல் நடத்தியதற்கு மன்னிக்கவும். இந்தாருங்கள், நீங்கள் எழுதிக் கொடுத்த உறுதிப்பத்திரம்!’’ என்று பாஸ்கரராயர் எழுதிக் கொடுத்த பத்திரத்தை பணிவுடன் அவரிடம் நீட்டினாள். பத்திரத்தைப் பெற்றுக் கொண்ட பாஸ்கரராயருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.
தன்னையும் வந்து பார்க்காமல் கடனைத் தீர்த்தால் போதுமென்ற எண்ணத்தில் நேராக தனவந்தர் வீட்டுக்குச் சென்ற பாஸ்கர ராயர், அங்கே தன் மனைவியைத் தேடினார். அவள் அங்கு இல்லை. யார் கண்ணிலும் அவள் புலப்படவில்லை. ‘கடன் தீர்க்கப்பட்டது’ என்று கையெழுத்திட்ட ரசீதை வாங்கிப் பார்த்தார். அது மனைவியின் கையெழுத்துத்தான் என அறிந்தார். ஆனால், அவளைக் காணவில்லையே! தாயே, இது என்ன சோதனை?’ என மனம் கலங்கினார் பாஸ்கர ராயர்.
பிறகு நான்கு நாட்கள் சென்றபின், பாஸ்கர ராயரின் மனைவி திரும்பி வந்தாள். வந்தவள் வருத்தத்தோடு, ‘‘திடீரென்று வந்து நிலத்தை விற்றுப் பணம் கொடு என்றால் எப்படிக் கொடுப்பது? பணம் கொடுக்க இப்போது வசதியில்லை. நிலம் விற்றபிறகுதானே கொண்டு வந்து கொடுப்பதாக என் அண்ணன்கூறிவிட்டார். அதனால் நான் இன்று காலையிலேயே புறப்பட்டு வந்துவிட்டேன்!’’ என்றாள். அவள் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போனார் பாஸ்கர ராயர்.
‘‘அப்படியானால், என் மனைவியின் வடிவில் வந்து, வட்டியும் முதலுமாக கடனைத் தீர்த்திட வந்தவள் யாராக இருக்கும்? அவள்… அவள்…. நான் வணங்கும் தெய்வம் அம்பிகையாகத்தான் இருப்பாள்! ‘அபர்ணா’ என்ற தன் பெயருக்கு களங்கம் வராமல் என் கடன் பிரச்னையைத் தீர்த்துவிட்டாள்’’ என்பதை அறிந்து கண்களில் கண்ணீர் மல்க அம்பிகையின் முன் சாஷ்டாங்கமாக விழுந்து நன்றியுடன் அன்னையைத் துதித்தார் பாஸ்கர ராயர்!
ஆர்.சந்திரிகா