Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அண்ணாமலை நடைபயணத்தின்போது சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாஜவினர் அலப்பறை: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்தின்போது சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாஜவினர் அலப்பறையில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, \”என் மண் என் மக்கள்\” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக பயணம் மேற்கொண்டு வருகிறார். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்த பயணம் நடைபெற்று முடிந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்கு வருகை புரிந்தார். அப்போது பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சங்கர மடத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் நடை பயணமாக வந்து பூக்கடை சத்திரம் பகுதியில் தனது நடை பயணத்தை அவர் முடித்தார். இதேபோன்று சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிபுரத்திற்கு உள்ளே வருவதற்கான சாலை மிக முக்கிய சாலையாக இருந்து வருகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை ஆக்கிரமித்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பாஜவினர் அலப்பறையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையுடன் வந்த 200 பேர் மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு 500 நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் குறைவான நபர்களே இந்த நடை பயணத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாஜவினர் செய்த அலப்பறை அதிகமாக இருந்ததாக பொதுமக்களும் அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளும் குற்றம் சாட்டினர். முக்கிய சாலை முடக்கப்பட்டதால் காஞ்சிபுரம் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கி தவித்தது. இதேபோன்று நேற்று முகூர்த்த நாள் என்பதால் வழக்கத்தைவிட பல மடங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊர்வலம் நடைபெற்ற சாலையிலேயே இருந்த திருமண மண்டபங்களுக்கு வர முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

பேண்ட் வாசிப்பதற்கு மட்டும் ஐந்திற்கும் மேற்பட்ட குழுக்கள் அமைத்தும், ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் சிலர் ஏறிக்கொண்டும் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு அந்த ஊர்வலம் நடைபெற்றது. கோயில் விழாக்களில் பயன்படுத்தும் குடையை ஆள்வைத்து தூக்கி வந்தது, தன்னைத் தானே விளம்பரப்படுத்தி கொள்கிறாரா அண்ணாமலை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபோன்ற கோயில் குடைகளை பெரும்பாலான தனியார் விழாக்களில் பயன்படுத்துவதை தவிர்ப்பதே வழக்கம். கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் இதுபோன்ற செயல்களால் பக்தர்கள் முகம் சுளித்தனர்.