Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அண்டமெல்லாம் பூத்த அபிராமி!

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

``மாதுளம் பூ நிறத்தாளை’’என்ற வார்த்தையால் திரோதான சக்தி என்று அழைக்கப்படுகின்ற ரகசியத்தை குறிப்பிடுகின்றார். கோயில்களை பொருத்தவரை ரகசியம் என்று அழைக்கப்படும் நடராஜர் சந்நதியானது அவருக்கே உரிய அரங்கமான சபையாக அமைந்திருக்கிறது. ஏதாவது ஒரு பக்தருக்கு நடனத்திருக்கோல காட்சியை அளித்திருந்தால் அந்த சபையில் மூன்று வடிவமாக சிவபெருமானை அதாவது ஆடவல்லானை பூசிப்பர். அதில் சிவகாமசுந்தரி அம்பிகா சமேத நடராஜப் பெருமானும், ரத்தினத்தில் தோன்றிய மரகதம் அல்லது ஸ்படிகம் இவற்றினால் ஆன லிங்க வடிவமும், சுவற்றில் திரையிட்டு மறைக்கப்பட்ட யந்திர வடிவத்தை அமைத்திருப்பர். இதற்கு ரகசியம் என்று பெயர். இந்த ரகசியத்தில் சிவனும் சக்தியும் சொல்லும் பொருளுமாய் இணைந்து அருள்வார். இதையே பட்டர் `சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும்’ (28) என்ற வார்த்தையால் அறியலாம்.

மேலும் காப்பிலேயே ``தார் அமர் கொன்றையும், என்று `சிவனையும் செண்பக மாலையும்’ (காப்பு) என்பதினால் சிவசக்தியையும் குறிப்பிடுவதிலிருந்து ரகசியத்தில் இருக்கும் `நிற்குண பிரம்ம தியானம்’ என்ற கலைச்சொல்லால் சிவசக்தியின் அரூப வழிபாட்டை ``மாதுளம் பூ நிறத்தாளை’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.``புவி அடங்கக் காத்தாளை’’என்பதனால் விஷ்ணு சொரூபமாக அவரது மார்பில் அமர்ந்து காத்தல் தொழிலை செய்ய உலகிற்கு உதவுகிறாள். ``காத்தாளை’’ என்ற வார்த்தையை சொன்னாலே விஷ்ணு சக்தி என்று பொருள்படும்.

``புவி அடங்க’’ என்று குறிப்பிட்டதற்கு காரணம் விஷ்ணுவினுடைய இரண்டு சக்திகளையும் சேர்த்தே குறிப்பிட்டார்.ஸ்ரீதேவியை காத்தாளை என்ற வார்த்தையாலும், புவி என்பதனால் பூமாதேவியும், அடங்க என்பதனால் மகாவிஷ்ணுவையும், புவி அடங்கக் காத்தாளை என்பதனால்ஸ்ரீதேவி, பூதேவி சமேத அமிர்த நாராயண பெருமாளையே குறிப்பிடுகிறார். உமையம்மையை விஷ்ணு வடிவத்திலேயே பார்க்கிறார் பட்டர். ``தரங்கக் கடலுள் வெங்கட் பணி அணைமேல் துயில் கூரும் விழுப்பொருளே’’ (35) என்பதனால் உமையம்மையே விஷ்ணு, விஷ்ணுவே உமையம்மை என்பதை அறியலாம்.

திருக்கடவூர் தல வரலாற்றை பொறுத்தவரை திருமால் தனது ஆபரணங்களை வைத்து அதில் இருந்து தோன்றிய அபிராமியை போற்றி வணங்கினார். அதனால் ஆபரண நாயகி என்று அவளுக்கு ஒரு பெயர். அபிராமி பட்டருக்காகவும், உமையம்மை தனது ஆபரணத்தை வைரக் குழையை வீசி எறிந்து அதையே நிலவாக மாற்றி அருளி அபிராமி பட்டரைக் காத்தாள். அப்படி தன்னை காத்ததனாலேயே ``காத்தாளை’’ என்கிறார் பட்டர். எமன் இறந்தவுடன் உயிரை பிடிக்க ஆள் இல்லாமையால் அனைவரும் வாழ்ந்து பூமிக்கு பாரமாயினர். அப்பாரம் தாங்காமல் பூமாதேவி அமிர்தகடேஷ்வரரை வணங்கினாள். அதனாலேயே சிவபெருமான் மீண்டும் எமனை தோற்றி அருளினார். இன்றும் காத்தல் ஆகிற இலக்குமியின் சந்நதியில் பூத்தாளை என்ற பூமாதேவியின் வடிவம் உள்ளது. அதனாலேயே திருக்கடையூரில் இருவரையும் சேர்த்தே ``புவி அடங்கக் காத்தாளை’’ என்று குறிப்பிட்டார் பட்டர்.

``அங்குச, பாசம், குசுமம்,

அங்கை, சேர்த்தாளை’’

என்ற வார்த்தையினால் ருத்ர சக்தியாகிய பாலாம்பிகை அல்லது கௌரி என்ற பெயர் உடைய உமையம்மையை குறிப்பிடுகின்றார். இந்த சக்திகள் அழிக்கும் தொழிலில் சிவபெருமானுக்கு உதவுகிறவர்கள். கிரோதம் என்ற கோப வடிவமான அங்குசத்தை உமையம்மை தரித்திருக்கிறாள். இதைக் ``க்ரோதா காராங்கு ஜோஜ்வலா’’ என்ற சகஸ்ர நாமத்தினால் அறியலாம். அழிக்கும் தொழிலுக்கு கோபமே அடிப்படை. கோபமாக இருக்கும்போது உமையம்மை காளியாக திகழ்கிறாள். கோபேச காளி என்பதை தேவி மகாத்மியம் தெளிவாக வரையறுக்கிறது.

‘பாசம்’ என்பது அழித்தல் செயலை செய்வதற்கு உதவும் எமனின் கருவியாகும். இதை உமையம்மை, தான் தரித்து அழிக்கும் ருத்ரனுக்கு உதவுகிறாள். சிற்ப சாத்திரமானது தேவதைகளின் ஆற்றல் மற்றும் அறிவை உணர்த்துவதற்கு ஆயுதங்களையோ அல்லது கருவிகளையோ தேவதையின் திருஉருவில் வடிப்பர். அந்த வகையில் அழித்தல் செயலை செய்கிற கௌரியாகிய உமையம்மைக்கு கருவியாக இருப்பது ``பாசம்’’ என்கிறார்.

``குசுமம்’’ - ஐந்து மலர்களையும் குசுமம் என்ற ஒரே வார்த்தையால் குறிப்பிடுகிறார். அரவிந்தம், அசோகம், சூதம், நவ மல்லிகா, நீலோத்பலம் என்ற ஐந்து மலர்களையும் இணைத்து உமையம்மையானவள் கொத்தாக தரித்து அருள்கிறாள். ஐம்புலன்களின் வழியே பெறுகின்ற காட்சியின்பம், கேட்டலாகிற இசை இன்பம், ருசித்தலாகிற வாய் இன்பம், தீண்டுதலாகிற மெய் இன்பம், முகத்தலாகிய வாசனை இன்பத்தையும் வெவ்வேறு மலர்களாக இங்கே குறிப்பிடுகிறார்.

சிருஷ்டி படைத்தலையும் மனதில் நினைவை படைத்தலையும், ஸ்த்தி - காத்தலையும் மனதில் நினைவை காத்தலையும், ஸம்ஹாரம் - அழித்தலையும், மனதில் எண்ணங்களை அழித்தலையும், திரோபவம் - மறைத்தலையும், நிகழ்காலத்திற்கு தக்க நினைவுகளை தவிர மற்றவைகளை மறைத்தலையும், அனுகிரஹ - அருளையும், தேவையான நினைவை மனதிற்கு கொண்டுவந்து நிலை நிறுத்துவது என்ற ஐந்து தொழிலை செய்யும் ஆற்றலையே ‘`குசுமம்’’ என்ற ஒரே வார்த்தையால் குறிப்பிட்டார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்