சிற்பமும் சிறப்பும்
ஆலயம்: போக நந்தீஸ்வரர் கோவில், நந்திக் கிராமம்,
சிக்பல்லாபூர், கர்நாடக மாநிலம்.
காலம்: பொ.ஆ.8 ஆம் நூற்றாண்டிலிருந்து - 15ஆம்
நூற்றாண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் பல முக்கிய
அரச வம்சத்தினரால் ஏராளமான கட்டுமானங்கள்,
திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.
வெளியிலிருந்து பார்ப்பதற்கு எவ்விதப் பரபரப்புமில்லாமல், பக்தர் கூட்டம் அதிகமின்றிக் காணப்படும் இந்த பெரும் ஆலய வளாகம், வரலாற்று, கலை ஆர்வலர்களுக்கு ஒரு ‘பொக்கிஷம்’
என்றால் அது மிகையல்ல.
9ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரையிலான தென் பாரதத்தின் புகழ்மிக்க அரச வம்சத்தினரின் கோவில் கட்டுமானப் பொறியியல், சிற்பக்கலை நுணுக்கம், அழகியல் வேறுபாடுகள் அனைத்தையும் ஒரு சேர இந்த ஆலயத்தில் காணலாம்.
பாணர், ராஷ்ட்ரகூடர், நுளம்பர், கங்கர், சோழர், ஹொய்சாளர், விஜயநகரம் போன்ற பெரும் அரச வம்சத்தினர் தத்தமது பாணிகளில் தம் கலைப்பங்களிப்புகளை இவ்வாலயத்தில்
செய்துள்ளனர்.பொ.ஆ.800 காலகட்டத்தில் பாண அரசர் வித்யாதரனின் அரசி ரத்னாவதியால் இவ்வாலயம் திருப்பணி செய்யப்பட்ட கல்வெட்டுத் தகவல்கள் காணக்கிடைக்கின்றன. ராஷ்ட்ரகூட மன்னர் மூன்றாம் கோவிந்தன் (பொ.ஆ.806) கல்வெட்டுக்கள், பாண அரசர் ஜெயதேஜா (பொ.ஆ.810) செப்புப்பட்டயங்கள், பிற்காலச் சோழர்களின் ஏராளமான கல்வெட்டுக்கள், விஜயநகர மன்னர் களின் திருப்பணி குறித்த கல்வெட்டுக்கள் மூலம் இவ்வாலயத்தின் தொன்மைச்சிறப்பு குறித்து அறியலாம்.
போக நந்தீஸ்வரர், அருணாச்சலேஸ்வரர் என இரு சந்நிதிகளில் சிவபெருமான் லிங்கவடிவில் அருள்பாலிக்கிறார். காம தேவேஸ்வரர், அபித குஜாலம்பிகை, கிரிஜாம்பிகை ஆகியோருக்கு
சிற்றாலயங்கள் உள்ளன.விமானங்களில் காணப்படும் கீர்த்தி முகங்கள், கிரீவ கோஷ்ட பேரழகு சிற்பங்கள், பல்வேறு மன்னர்களால் அருகருகே அமைக்கப்பட்ட நந்திகளின் சிற்ப அமைதி, வேறுபாடுகள், ஒரே கல்லால் செய்யப்பட்ட நுணுக்கம் மிகுந்த கல்குடை, சிவன்-பார்வதி திருக்கல்யாணம், கருவறை முன்மண்டபத்தின் வெளிப்புறமெங்கும் கிளிகள் செதுக்கப்பட்ட ஹொய்சாளர் தூண்கள் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.வெளிப்புறச்சுவரில் நடனமாடும் சிவன், மகரம்மீது வருணன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்களின் எழிலும் நேர்த்தியும் காண்
போரைக் கவர்ந் திழுக்கின்றன.
மது ஜெகதீஷ்