Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆரோக்கிய வாழ்வே எதிர்கால தலைமுறையினரின் பலம்!

நன்றி குங்குமம் தோழி

நம்முடைய அடிப்படை தேவைதான் ஒரு தொழில் துவங்கவே காரணமாக அமைகிறது. அப்படித்தான் கோவையை சேர்ந்த எழில்செல்வியும் தன்னுடைய பேரக்குழந்தைகளுக்காக ஹெல்த் மிக்ஸ் உணவினை தயாரித்தவர், அதனையே தன் தொழிலாக மாற்றி அமைத்துள்ளார். தன் செல்லப்பிராணியின் நினைவாக ‘ஜாசி ஹெல்த் மிக்ஸ்’ என்று அதன் பெயரில் நிறுவனத்தை துவங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.

‘‘என் மகளுக்கு குழந்தை பிறந்த போது, என் பேத்தி எடை குறைவாக இருந்தாள். முதல் ஆறு மாசம் தாய்ப்பால் கொடுத்தும் அந்த வயதிற்கான எடை குழந்தைக்கு இல்லை என்பதால் டாக்டர் முளைக்கட்டின சத்துமாவில் கஞ்சி தரச்சொன்னாங்க. முதலில் கடைகளில் கிடைக்கும் கஞ்சி மிக்சினைதான் வாங்கிக் கொடுத்தோம். ஆனால் அது குழந்தைக்கு ஒத்துக்ெகாள்ளவில்லை.

அதனால் நானே வீட்டில் தயாரிக்க ஆரம்பித்தேன். அதை குழந்தைக்கு கொடுத்த போது அவளின் எடை கணிசமாக ஏற ஆரம்பித்தது. குழந்தையும் நல்லா ஆக்டிவா செயல்பட ஆரம்பிச்சா. அதன் பிறகு பேரன் பிறந்தான். அவனுக்கும் இதையே கொடுக்க ஆரம்பிச்சேன். என் மகள் தன் குழந்தைக்கு கொடுப்பதைப் பார்த்து அவளின் தோழிகள் கேட்ட போது அவர்களுக்கும் செய்து கொடுத்தேன். அவர்கள் நன்றாக இருப்பதாக சொன்னது மட்டுமில்லாமல் இதை சிறிய அளவில் பிசினஸா செய்யலாமேன்னு ஆலோசனையும் ெசான்னாங்க.

அப்படித்தான் என் மகளின் குடியிருப்பில் உள்ளவர்களுக்காக செய்து கொடுத்தேன். முதலில் மூன்று கிலோ மாவினை அரைத்து என் மகளிடம் கொடுத்தேன். அவள்தான் அதை தேவையான அளவிற்கு ஏற்ப பேக்கிங் செய்து அவள் குடியிருப்பில் கொடுத்து வந்தாள். அதன் பிறகு ஆர்டர் அதிகமானதால், தேவைப்படுபவர்களுக்கு நானே கொரியர் செய்ய ஆரம்பித்தேன். அதற்காக தனிப்பட்ட பேக்கிங் மற்றும் டிசைனிங் எல்லாம் தயார் செய்தேன். அதற்கு என் பெண்தான் உதவினாள். தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மட்டுமே விற்பனை செய்து வந்த என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது என் மகன்தான்.

ஒருமுறை என் மகன் சிறு தொழில் சார்பாக நடைபெறும் மீட்டிங்கிற்கு என்னை அழைத்து சென்றான். அங்கு போன போதுதான் என்னைப் போல் பல தொழில் செய்பவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு செல்லும் வரை ஒரு கஞ்சி மிக்ஸ்தான் நான் தயார் செய்து வந்தேன். ஆனால் அங்கு போன போது பலர் பலவிதமான மிக்ஸ் குறித்து கேட்டார்கள். குறிப்பாக உடல் எடையை குறைக்கக்கூடிய மிக்ஸ் உள்ளதா என்று கேட்ட போதுதான் நான் அது குறித்த தேடலில் இறங்க ஆரம்பித்தேன். அதன் பிறகு உடல் எடை குறைப்பது, விட்டமின் டி, இரும்புச் சத்து என பல வகையான மிக்ஸ்களை ரெடி செய்தேன்’’ என்றவர் ஒரு பெரிய நெருக்கடியை பிசினஸில் சந்தித்தது குறித்து விவரித்தார்.

‘‘என்னுடைய உணவுப் பொருட்கள் பிடித்துப்போய் சிங்கப்பூரில் தான் ஆர்கானிக் கடை ஒன்றை திறக்க இருப்பதாகவும், அதற்கு என் மிக்ஸ் அனைத்தும் வேண்டும் என்று பெண்மணி ஒருவர் கேட்டார். நானும் என்னிடம் இருக்கும் பத்து வகை மிக்ஸ்களையும் தருவதாக சொன்னேன். அவர்களும் அதற்கான முன்பணமும் கொடுத்தாங்க. நானும் பொருட்களை தயார் செய்ய துவங்கினேன். அந்த சமயத்தில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 160 கிலோ ஹெல்த் மிக்ஸ்களை தயார் செய்த நிலையில் கொரியர் சர்வீஸ் இல்லை என்பதால், என்னால் அவர்களுக்கு அதை அனுப்ப முடியவில்லை.

அவர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் கொரோனா முடிந்த பிறகு வாங்கிக் கொள்வதாக சொல்லிட்டாங்க. என்னால் எதுவுமே செய்ய முடியல. முன் பணம் கொடுத்திருந்தாலும், அது எனக்கு பெரிய இழப்பு என்றுதான் சொல்லணும். காரணம், நான் தயார் செய்திருந்த 160 கிலோ உணவினை விற்பனை செய்யணும். கொரோனா நேரம் என்பதால் யாரும் வாங்க முன் வரவில்லை. குறைந்த விலையில் தெரிந்தவர்களுக்கு கொடுத்தேன். அப்படியும் 30 கிலோ மிச்சமானது. இவை முழுக்க முழுக்க ஆர்கானிக் முறையில் செய்வதால் ஆறு மாசம் வரைதான் தாங்கும். அதன் பிறகு வண்டு வந்திடும். அதை மீண்டும் சலித்து, வறுத்து நாங்களே பயன்படுத்தினோம்.

இது என்னைப்போல் சிறிய அளவில் பிசினஸ் செய்றவங்களுக்கு பெரிய இழப்புதான் என்றாலும், அதில் இருந்து மீள என் குடும்பத்தினர்தான் முக்கிய காரணம். நான் துவளும் போது என் பிள்ளைகள் எனக்கு உறுதுணையா இருந்தாங்க. இன்றும் இருந்து வராங்க. ஒரு கதவு மூடினால் மறுகதவு திறக்கும்னு சொல்வாங்க. அதேபோல் இதில் இழப்பு ஏற்பட்டாலும், அடுத்து 75 கிலோவுக்கான ஆர்டர் வந்தது. நான், என் கணவர் மற்றும் மகன் மூவரும் சேர்ந்து மூன்றே நாட்களில் தயார் செய்து கொடுத்தோம்’’ என்றவர் வேளாண் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பல பயிற்சி பட்டறையில் பங்கு பெற்று தன் பிசினஸை முன்னேற்றப் பாதையில் வழி நடத்தி வருகிறார்.

‘‘வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சிகள் மட்டுமில்லாமல் நம்முடைய தொழில் முன்னேற பல ஆலோசனைகளை வழங்குவார்கள். அதில் நான் மேலும் பல உணவுப் பொருட்களை தயாரிப்பது குறித்து மட்டுமில்லாமல், என் பிசினஸிற்கு தேவையான நிதி உதவியும் பெற முடிந்தது. அதில் முதல் கட்டமாக கிடைத்த நிதியில் சோலார் டிரையரை வாங்கினேன். காரணம், மதிப்புக்கூட்டல் முறையில் உணவினை தயாரிப்பதால், பொருட்கள் அதிக நாட்கள் ஷெல்ஃப் லைஃப் இருக்க சோலார் டிரையர் பயனுள்ளதாக இருந்தது. அதன் பிறகு நிறைய கண்காட்சிகளில் ஸ்டால் அமைத்தேன். வேளாண் பல்கலைக்கழகத்தில் நான் இன்குபேட்டியாக இருப்பதால் அரசு எங்களைப் போல சிறு தொழில் செய்பவர்களுக்கு செய்யும் உதவிகளை பற்றி தெரிந்து கொண்டு நான் மட்டுமில்லாமல் மற்றவர்கள் பெறுவதற்கும் உதவி செய்ய முடிகிறது.

ஹெல்த் மிக்ஸில் ஆரம்பித்து இப்போது ரோஸ் மிக்ஸ், சமையலுக்குத் தேவையான அனைத்து மசாலாப் பொடிகள், கருவேலம்பட்டை கொண்டு தயாரிக்கப்படும் பற்பொடி, முடக்கத்தான், முருங்கைக்கீரை தோசை மற்றும் சப்பாத்தி மிக்ஸ், டயாக்கேர் டீ என ஒவ்வொரு பொருளும் மக்களின் தேவையை அறிந்து எந்தவித பிரிசர்வேடிவ்கள் இல்லாமல் தயாரித்து தருகிறேன். ஆர்டரின் பேரில் செய்வதால், பொருளை ஃப்ரெஷ்ஷாகவும் தரமாகவும் கொடுக்க முடிகிறது.

பொதுவாக வேளாண் பல்கலைக்கழகத்தில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உணவுப் பொருட்கள் சார்ந்து பலவற்றுக்கான பயிற்சி அளித்து வருகிறார்கள். நானும் அங்குதான் தொக்கு முதல் மற்ற உணவுப் ெபாருட்களை செய்ய கற்றுக் கொண்டேன். இல்லத்தரசிகள் இது போன்ற பயிற்சிகளை மேற்ெகாள்வதன் மூலம் அவர்களாலும் வீட்டில் இருந்தபடியே சிறிய அளவில் சம்பாதிக்க முடியும். இப்போது டெக்னாலஜி பெண்கள் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்ய உதவுகிறது. உதாரணத்திற்கு செல்போனில் வாட்ஸப் குழு மூலமும் நம் பிசினஸை அமைக்க முடியும்.

நானும் அது போன்ற குழு ஒன்றை அமைத்து அதன் மூலமும் விற்பனை செய்து வருகிறேன். வெளிநாட்டிற்கு விற்பனை செய்ய துவங்கவில்லை என்றாலும், அங்கு செல்பவர்கள் என் பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இயற்கை நமக்கு நிறைய வளங்களை கொடுத்திருக்கு. நாம்தான் அதனை பயன்படுத்த தெரியாமல் இருக்கிறோம். உணவே மருந்துன்னு நம் முன்னோர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதான். நம் அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்க்கிறோமோ இல்லையோ... நல்ல ஆரோக்கியமாக வாழ கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியமானது. அதைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன். ஆரோக்கிய வாழ்வே எதிர்கால தலைமுறையினரின் பலம்’’ என்றவருக்கு வாழ்வில் ஒரே ஒரு லட்சியம் உள்ளதாம்.

‘‘பிசினஸ் பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப என்னால் உணவினை தயாரித்து தர முடியும். ேமலும் அதனை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு என்னால் முடிந்த அளவிற்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் என் வாழ்நாளில் எனக்கென்று இருப்பது ஒரே ஒரு லட்சியம்தான். சிங்கப்பூரில் தன் ஆர்கானிக் கடைக்காக எனக்கு அட்வான்ஸ் பணம் ெகாடுத்தவரை சந்திக்க வேண்டும். அவரிடம் ஒன்று நான் வாங்கிய பணத்தை திருப்பி தரவேண்டும் அல்லது அவரின் கடைக்கான ஆர்டரினை பெற வேண்டும். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் அந்த நாளும் வரும். என் லட்சியமும் நிறைவேறும்’’ என்றார் எழில்செல்வி.

தொகுப்பு: ஷன்மதி

படங்கள்: சதீஷ்