கோவை, ஜூலை 14: கோவை உடையாம்பாளையம் ரோடு சின்னவேடம்பட்டி பாரதி தெருவில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை சிலர் பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. சரவணம்பட்டி போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக விமல், ஹான்ஸ், கணேஷ் போன்ற போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து போலீசார் போதை பாக்கு பொருட்கள் பதுக்கி வைத்திருந்த சின்னவேடம்பட்டி சுப்பிரமணியம் நகரை சேர்ந்த மணிகண்டன் (45), கணபதி ராஜீவ்காந்தி ரோட்டை சேர்ந்த பாலாஜி (35) மற்றும் கணபதி மூகாம்பிகை நகரை சேர்ந்த ராம்குமார் (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 62 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து இவற்றை வாங்கி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.