பள்ளிகொண்டா, பிப்.5: அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி, பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(45), கூலி தொழிலாளி. இவரது மனைவி புனிதா(38). இவர்களுக்கு ரம்ய(14), மாதவி(12), பிரேமா(10), காவ்யா(8), மித்ரா(6) ஆகிய 5 மகள்கள் உள்ளனர். வெங்கடேசன் விவசாய கூலி வேலை மற்றும் டிராக்டர் ஓட்டும் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில், குடும்ப தேவைக்காகவும், மகள்களின் படிப்பு செலவுக்காகவும் வெங்கடேசன் ஊரில் பல்வேறு நபர்களிடம் கடன்களை வாங்கி அதற்கு வட்டி கட்டி வந்துள்ளார். மேலும், தொடர்ந்து வாங்கிய கடன் தொகை சுமார் ₹27 லட்சம் வரை சென்றதால் மனைவி புனிதா இதுபற்றி வெங்கடேசனிடம் இப்படியே ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்து கொண்டிருந்தால் நிரந்தரமாக கடனை அடைக்க என்ன வழி என கேட்டுள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேசன் வேலைக்கும் சரிவர செல்லாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்த வெங்கடேசனிடம் மனைவி புனிதா மீண்டும் கடன் பற்றிய பேச்சு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் மன விரக்தியடைந்த வெங்கடேசன் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனது மனைவியின் புடவையால் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து அவரது மனைவி வீட்டிற்கு வந்து பார்த்த போது தூக்கில் தொங்கிய கணவனை பார்த்து அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வெங்கடேசனை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புனிதா வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பரிந்துரை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


