Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

40 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள புலியூர் ஏரியை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை பொதுமக்கள் எதிர்பார்ப்பு

போச்சம்பள்ளி: புலியூரில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சுற்றுலா தலமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லம் மட்டுமே உள்ளது. போதிய சுற்றுலா தலங்கள் இல்லாததால், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், இம்மாவட்ட மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை உள்ளது. வெளி மாவட்டங்களுக்கு சென்றால் கூடுதல் செலவு என்பதால், பெரும்பாலான நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் சுற்றுலா செல்ல தயங்கி வருகின்றனர். மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரமாக போச்சம்பள்ளி உள்ளது. போச்சம்பள்ளியை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், பொழுதுபோக்கிற்கென அருகில் எவ்வித சுற்றுலா தலமும் இல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

போச்சம்பள்ளியில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையின் அருகில் உள்ள புலியூர் ஏரியை, சுற்றுலா தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பஸ்களும், கார்களும் சென்று வருகின்றன. குறிப்பாக தர்மபுரி பகுதியில் இருந்து திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, சென்னை, மேல்மருவத்தூர் போன்ற இடங்களுக்கு இந்த சாலை வழியாக தான் செல்கின்றனர். அதேபோல் சென்னை, பாண்டிச்சேரி, வேலூர், திருவண்ணாமலை பகுதியில் இருந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், மேட்டூர் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்களும், இந்த சாலை வழியாக தான் செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் கடல்போல் காட்சியளிக்கும் புலியூர் ஏரியை ரசித்து செல்கின்றனர். சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு, கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. பாரூர் பெரிய ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரால் எப்போதும் தண்ணீர் நிறைந்து காட்சியளிக்கிறது.

இந்த ஏரிக்கு நீர்க்கோழி, மீன்கொத்திகள், நாரைகள், கொக்குகள், தூக்கணாங்குருவிகள் அதிக அளவில் வருகிறது. அவ்வாறு வரும் பறவைகள், அருகில் உள்ள மரங்களில் அதிகளவில் வசித்து வருகின்றன. எழில் கொஞ்சும் இந்த ஏரியை நவீனப்படுத்தி, சுற்றுலா தலமாக்க வேண்டும். மேலும், ஏரியை சுற்றி மரங்கள் நடவு செய்வதுடன், ஆங்காங்கே பொதுமக்கள் உட்கார்ந்து பொழுதை கழிக்கவும், குழந்தைகள் விளையாட வசதியாக விளையாட்டு உபகரணங்கள் அமைக்க வேண்டும். மேலும், படகு இல்லம் அமைத்தால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர வாய்ப்பு உள்ளது. போச்சம்பள்ளி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களும் அதிகளவில் வருவார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர் சசிகுமார் கூறுகையில், ‘புலியூர் ஏரி, சேலத்தில் இருந்து தர்மபுரி, போச்சம்பள்ளி, வேலூர், சென்னை மற்றும் திருவண்ணாமலை, மேல்மருவத்தூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லகூடிய முக்கிய சாலையில் அமைந்துள்ளது. இந்த ஏரியை சுற்றுலா தலமாக்கினால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். அதேபோல், ஏரியில் தண்ணீர் நிரம்பி செல்லும் போது, மதகு வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் அவ்வழியாக வாகனங்களில் வருபவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி, ரசித்து செல்கின்றனர். எனவே, ஏரியையொட்டி நடைபாதை, அமருவதற்கு பென்ச், மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்,’ என்றார்.

இதுகுறித்து தென்னை ஆராய்ச்சியாளர் கென்னடி கூறுகையில், ‘புலியூர் ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. போச்சம்பள்ளி பகுதியில் பல தொழிற்சாலைகள் அமைந்துள்ள நிலையில், தொழிலாளர்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, புலியூர் ஏரியை சுற்றுலா தலமாக்கி சிறுவர் பூங்கா, மான் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.