Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

32 ஆண்டுக்குப்பின் முதன்முறையாக அமைச்சர் பதவி இல்லாத விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டம்

விழுப்புரம், ஏப். 29: அமைச்சர் பொன்முடியிடமிருந்து பதவி பறிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முதல் முறையாக அமைச்சர் இல்லாத மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. தற்போது திமுகவில் 7 எம்எல்ஏக்களும், அதிமுகவில் 3 எம்எல்ஏக்களும், பாமகவில் ஒருவரும் உள்ளனர். தமிழகத்தில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து விழுப்புரம் ராமசாமி படையாட்சியர் மாவட்டம் கடந்த 1993ம் ஆண்டு உருவாக்கப்பட்டு பின்னர் விழுப்புரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து மிகப்பெரிய மாவட்டமான விழுப்புரத்தை 2ஆக பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் பல வரலாற்று சிறப்புகளை படைத்தது போல அரசியலிலும் முத்திரை பதித்த மாவட்டமாகத்தான் உள்ளது.

அந்த வகையில் திமுக, அதிமுக எந்த ஆட்சி அமைக்கப்பட்டாலும் இந்த மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு வந்தது. அதன்படி 1993ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆனந்தன் மற்றும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெனார்த்தனன் ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கண்டமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஆகியோரும் அடுத்தடுத்து அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர். தொடர்ந்து திண்டிவனம், விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த சி.வி.சண்முகம் அதிமுக ஆட்சியில் வணிகவரி, பள்ளிக்கல்வி போன்ற துறைகளுக்கு அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

அதேபோல் திமுக ஆட்சியில் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பொன்முடிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு போக்குவரத்து, உயர்கல்வி, வனத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். அதேபோல் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தானும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் துறை அமைச்சராக பதவி வகித்தவர். இப்படி திமுக ஆட்சியிலும் சரி, அதிமுக ஆட்சியிலும் சரி யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்படுவது கட்டாயமாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போதைய அமைச்சரவையிலிருந்து திருக்கோயிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி நீக்கப்பட்ட நிலையில் முதல்முறையாக அமைச்சர் பதவி இல்லாத விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டமாக உள்ளது.

ஏற்கனவே செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் வசமிருந்தும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் மாவட்டம் பிரித்த 32 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அமைச்சர் இல்லாத வெறும் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்டமாக இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 சட்டமன்ற தொகுதியில் திருக்கோவிலூர், விக்கிரவாண்டி, செஞ்சி, விழுப்புரம் திமுக வசமும், திண்டிவனம், வானூர் அதிமுக வசமும், மயிலம் பாமக வசமும் உள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் திமுக வசமும், கள்ளக்குறிச்சி அதிமுக வசமும் உள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 7 திமுக, 3 அதிமுக, 1 பாமக எம்எல்ஏக்கள் உள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அமைச்சர் இல்லாத மாவட்டமாக இருப்பதால் விரைவில் கட்சி தலைமை நல்ல முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் கட்சியினர் உள்ளனர்.