2,553 மருத்துவர் காலிப்பணியிடங்கள் இரண்டு மாதங்களில் நிரப்பப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா
திருவண்ணாமலை, ஜூன் 14: தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களில் 2553 மருத்துவர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் 6வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக துணை வேந்தர் கே.நாராயணசாமி தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மருத்துவக் கல்வி இயக்குநர் ஜெ.சங்குமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கோ.அரிகரன் வரவேற்றார்.
விழாவில், 98 மருத்துவர்களுக்கு பட்டங்கள் வழங்கி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் பேசியதாவது: திருவண்ணாமலை மருத்துவக் கல்லுாரியில் கேத்ேலப் அமைக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, விரைவில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, வரும் நிதியாண்டில் கேத்லேப் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த மருத்துவக் கல்லூரிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துத்தரப்படும். குளிர் சாதன வசதியுடன் கூடிய அரங்கம் கட்டித்தரப்படும். வகுப்பறை, நூலகம் போன்றவை அதி நவீன வசதிகளுடன் இந்த நிதி ஆண்டில் மாற்றித்தரப்படும்.கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவ காலிப்பணியிடங்களை வெளிப்படை தன்மையுடன் நிரப்பி வருகிறது. சமீபத்தில் 1021 மருத்துவர் பணியிடங்கள் கலந்தாய்வின் மூலம் அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் நிரப்பப்பட்டன. அதில், 193 பேர் இதுவரை பணியில் சேரவில்லை. அவர்களுக்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 977 செவிலியர் பணியிடங்களும், 400க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. இரண்டு மாதங்களில் 2553 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, பட்டம் பெறும் மருத்துவர்களும் அதற்கு விண்ணப்பிக்கலாம். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் ஒரு கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். இதயம் காப்போம், தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. செயற்கை கருத்தரித்தல் மையம் எனும் மகத்தான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம், விபத்தில் சிக்கிய ஏராளமான உயிர்கள் காக்கப்பட்டுள்ளன.
ெகாரோனா பாதிப்புக்கு பிறகு இளம் வயதினருக்கும் இதய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, அகில உலக மருத்துவர்களை அழைத்து சென்னையில் மாநாடு நடத்தினோம். அந்த மாநாட்டில் இந்த பாதிப்புகள் குறித்து பேசப்பட்டது. மேலும், இதய நோயால் பாதிக்கப்படுவோருக்கு பயன்படுத்தும் மாத்திரைகள் துணை சுகாதார நிலையங்களிலும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், மருத்துவ கல்லூரி துணை முதல்வர் சங்கீதா, கண்காணிப்பாளர் மாலதி உள்பட பலர் கலந்துகொண்டனர். நிலைய மருத்துவ அலுவலர் கதிர் நன்றி கூறினார். முன்னதாக, தமிழ் வழி மருத்துவக் கல்வி எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. மேலும், அது ெதாடர்பான நூல் வெளியிடப்பட்டது.