Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

16ம் நூற்றாண்டை கடந்த தலைப்பலி சிற்பங்கள் திருச்சியில் கண்டுபிடிப்பு

திருச்சி : 16ம் நூற்றாண்டை கடந்த தலைப்பலி சிற்பங்கள் திருச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.திருச்சி திருவானைக்காவல் கீழ உள்வீதியில் உள்ள ஆனந்த கணபதி கோயில் வாயிலின் இருபுறத்தும் விரியும் வெளிச்சுவரில் இரண்டு தலைப்பலி சிற்பங்கள் இணைத்து கட்டப்பட்டுள்ளன. இரண்டும் ஏறத்தாழ ஒன்று போல் அமைந்துள்ளன. இரண்டு பாதங்களையும் பக்கவாட்டில் திருப்பியவாறு நிற்கும் ஆடவர்கள் இடக்கையால் தலைமுடியை பிடித்தபடி வலக்கையில் கொண்டுள்ள கத்தியால் தங்கள் கழுத்தை அறுத்து தலைப்பலி தரும் அமைப்பில் இச்சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தொடைவரையிலான முன் மடிப்பு கொண்ட இடுப்பாடையும், கழுத்தணியும் பெற்றுள்ள இந்த சிற்பங்களின் செவிகள் நீள்செவிகளாக உள்ளன.

இடுப்பின் வலப்புறம் இரண்டிலுமே கச்சையில் குறுவாள் உள்ளது. தனி சிற்பங்களாக பாறையில் செதுக்கப்பட்ட இவ்விரு தலைப்பலி ஆடவர்களையும் பாதுகாப்பு கருதி கோயில் சுவரில் இணைத்து கட்டியுள்ளனர்.இந்நிலையில் இந்த சிற்பங்களை ஆய்வு செய்த குழுவினர் டாக்டர் ராசமாணிக்கனார், வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் கலைக்கோவன், பேராசிரியர்கள் அகிலா, நளினி ஆகியோர் கூறுகையில், சிற்பங்களின் வடிப்பு, அலங்கரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றைப் பொதுக்காலம் 15 அல்லது 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். அதே தெருவின் மறுமுனையிலுள்ள ஈசான்ய விநாயகர் கோயில் முன்னுள்ள தரைப்பகுதியில் புதைந்த நிலையில் கோயில் வாயிலின் வலப்புறம் மற்றொரு தலைப்பலி சிற்பம் கண்டறியப்பட்டது.

கழுத்தில் பட்டையான அணிகலனும், இடுப்பில் மரமேறிகள் உடுத்துமாறு போன்ற சிற்றாடையும் பெற்றுள்ள இந்த ஆடவர் சிற்பமும் முந்தைய சிற்பங்கள் போலவே இடக்கையால் தலைமுடியை பற்றியபடி வலக்கை கத்தியால் தலை அறுக்கும் அமைப்பில் உள்ளது. இச்சிற்பத்தின் பாதங்களும் முந்தையன போலவே பக்கவாட்டில் திருப்பப்பட்டுள்ளன. நீள்செவிகளுடனுள்ள இந்த ஆடவரின் இடுப்பின் வலப்புறம் முந்தானை போன்ற இடுப்பாடை தொங்கல் உள்ளது. குறுவாளற்ற நிலையிலுள்ள சிற்பத்தை நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டதாக கொள்ளலாம்.

திருச்சி நகரிலும், திருவானைக்காவலிலும் இதுபோன்ற தலைப்பலி சிற்பங்கள் பல ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. திருவானைக்காவல் கோபுர வாயில் அருகிலேயே இடம் பெற்றுள்ள தலைப்பலி சிற்பம், இப்போது கண்டறியப்பட்டுள்ள சிற்பங்களினும் காலத்தால் பழமையானது ஒன்றாகும். உறையூர், வாளாடி, உய்யக்கொண்டான் திருமலை ஆகிய இடங்களில் வரலாற்றாய்வு மைய ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட ‘ தலைப்பலி சிற்பங்கள்’ திருச்சி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றனர்.