Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

11 ஊராட்சிகளில் 170 தூய்மை பணியாளர்களை நியமிக்க முடிவு

நாமக்கல், ஏப். 11: நாமக்கல் சிறப்பு நிலை நகராட்சியுடன் வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம், மரூர்பட்டி, பாப்பிநாய்க்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் 12ம்தேதி முதல், நாமக்கல் மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. புதியதாக இணைக்கப்பட்ட 11 ஊராட்சிகள், கடந்த ஜனவரி மாதம் முதல் நாமக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அங்கு பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்கள், தொடர்ந்து மாநகராட்சியின் கட்டு பாட்டில் பணியாற்றி வருகின்றனர். ஊராட்சி செயலாளர்கள் வேறு ஊராட்சிகளுக்கு மாற்றப்பட்டு விட்டனர்.

ஊராட்சிகளின் கணக்கு வழக்குகள் முழுவதும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. 11 ஊராட்சி பகுதிகளில் சுமார் 90 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். 27 ஆயிரம் குடியிருப்புகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 11 ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர் பிரச்னை, மின்விளக்கு, சாக்கடை பராரிப்பு போன்ற பணிகளை மாநகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் செய்து கொடுத்து வருகிறது. 11 ஊராட்சிகளில் இந்த ஆண்டு மாநகராட்சி வரிவசூல் செய்யாவிட்டாலும், அரசின் உத்தரவு படி அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதால், 11 ஊராட்சிகளிலும் குடிநீர் பிரச்னை ஏற்படாதவாறு, உரிய நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

புதியதாக சேர்க்கப்பட்ட 11 ஊராட்சிகளிலும், தூய்மை பணிகளை மேற்கொள்ள, ஏற்கனவே 92 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இவர்கள் மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். 11 ஊராட்சிகளும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு உள்ளதால், அங்கு புதியதாக 170 தூய்மை பணியாளர்களை நியமித்து, தூய்மை பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியில் தூய்மை பணிகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. தினமும் 25 டன் குப்பைகள் அங்கிருந்து வருகிறது. தூய்மை பணியில் 170 பணியாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவு கிடைத்த உடன், புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது பணிபுரியும் பணியாளர்களும், தொடர்ந்து பணியில் இருப்பார்கள். நாமக்கல் மாநகராட்சி பகுதியில் தினமும் 54 டன் குப்பை கழிவுகள் சேகரமாகிறது. இதில் மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 4 மையங்கள் மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ளது. அதுபோன்ற மையங்கள், இணைக்கப்பட்ட பகுதியிலும் ஏற்படுத்தப்படும். அந்த பகுதியிலும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படும்,’ என்றனர்.