Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஹாகா கிராமங்கள் மனையிட அனுமதி தாமதம்: விண்ணப்பங்கள் முடக்கியதால் மக்கள் தவிப்பு

கோவை, ஜூன் 11: கோவை மாவட்டத்தில் நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டணம், தேவராயபுரம், கலிக்க நாயக்கன்பாளையம், இக்கரை போளுவாம்பட்டி, மத்வராயபுரம், ஆலாந்துறை, பூலுவப்பட்டி, தென்கரை, மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், எட்டிமடை, மாவுத்தம்பதி, தொண்டாமுத்தூர், நாயக்கன்பாளையம், கூடலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், நஞ்சுண்டாபுரம், சின்னதடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம் போன்ற 23 கிராமங்கள் ஹாகா என அழைக்கப்படும் மலையிட பாதுகாப்பு எல்லைக்குள் இருக்கும் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வீடு, கட்டடங்கள் கட்ட உள்ளூர் திட்ட குழுமத்தின் அனுமதி வழங்கப்படுவதில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வீடுகள் எந்த வித அனுமதியும் இன்றி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ஹாகா கிராமங்களில் உள்ள மனையிடங்களை முறைப்படுத்த, கடந்த ஆண்டு அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டது. மனையிடங்களை முறைப்படுத்த ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மனையிடங்கள் தொடர்பான ஆவணங்கள், பட்டா மற்றும் வருவாய்த்துறை, கனிம வளத்துறை, வனத்துறை, வேளாண் பொறியியல் துறையிடம் தடையின்மை சான்று பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்து.  கடந்த காலங்களில் மனையிடங்கள் வரன்முறைப்படுத்த இத்தனை அரசு அலுவலகங்களில் சான்று பெற வேண்டும் என தெரிவிக்கப்படவில்லை. ஹாகா கிராமங்களில் பலர் மனை பட்டா இன்னும் பெறாத நிலைமை இருக்கிறது. பட்டா வாங்கவே மக்கள் படாதபாடு படுகின்றனர். இந்த நிலையில் பட்டா வாங்கி, 4 அரசு துறைகளின் தடையின்மை சான்று பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்து, பின்னர் பஞ்சாயத்து அலுவலகம் சென்று அப்ரூவல் வாங்க முடியாமல் தவிப்படைந்தனர்.

உள்ளூர் திட்ட குழுமம் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கியும் ஹாகா கிராமங்களில் இருந்து பொதுமக்கள் உரிய சான்று பெற்று ஆன்லைனில் சமர்ப்பிக்க கால தாமதம் ஏற்பட்டது. தடையின்மை சான்றுகள் முறையாக சமர்ப்பித்தால் மட்டுமே ஆன்லைன் பதிவு முழுமையாக ஏற்க முடியும். வேளாண் பொறியியல் பிரிவில் தடையின்மை சான்று பெற தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த சான்று தேவை என ஆன்லைன் பதிவில் கேட்பதால், மக்கள் தவிப்படைந்தனர். இதுகுறித்து ஹாகா கிராமத்தினர் கூறுகையில்,‘‘விண்ணப்பித்து 6 மாதங்களாகி விட்டது. உள்ளூர் திட்ட குழுமம் விண்ணப்பங்களை நிராகரித்து விட்டதா என்ற விவரமும் தெரியவில்லை.

ஊராட்சி நிர்வாகத்தை கேட்டால் தங்களுக்கு விண்ணப்பம் வந்து சேரவில்லை என்கிறார்கள். பல ஆயிரம் விண்ணப்பங்களின் நிலவரம் தெரியவில்லை.

ஆப்லைன் மூலமாக டிடிசிபி அனுமதி சான்று வழங்கினால் அனைத்து மலை கிராம மக்களும் பயன்பெறுவார்கள். தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, பேரூர் செட்டிபாளையம், எட்டிமடை போன்ற கிராமங்கள் நகருக்கு இணையாக வளர்ந்து விட்டது. பள்ளி, கல்லூரிகள், பெரிய கட்டடங்கள் நிறைந்த இந்த பகுதிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதகமாகவே இருக்கிறது. ஹாகா கிராமங்களில் மனையிட அங்கீகாரம் எளிதாக்க மாவட்ட நிர்வாகம் தேவையான திட்டமிடல் மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.