பாலக்காடு, நவ.10: கொழிஞ்சாம்பாறை அருகே வண்ணாமடையில் ஸ்கூட்டரில் எரிசாராயம் கடத்தியவர் தப்பி ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே வண்ணாமடை சந்திப்பு பகுதியில் சித்தூர் கலால்துறை இன்ஸ்பெக்டர் பாலகோபாலன் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்கூட்டரில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி பரிசோதனைக்கு முயற்சித்தனர்.
இதனால், வாலிபர் ஸ்கூட்டரை சாலையோரம் நிறுத்துவதுபோல பாசாங்கு காண்பித்து ஸ்கூட்டரை வேகமாக இயக்கி குமரனூர் சாலை வழியாக தப்பிச்சென்றார். இவரை பின்தொடர்ந்து பிடிக்க போலீசார் மீண்டும் முயற்சித்தனர். இதனால் ஸ்கூட்டரில் வேகமாக சென்ற வாலிபர் நிலை தடுமாறி மரத்தில் மோதி நின்றுள்ளார். பின்னர் ஸ்கூட்டரை விட்டு தப்பி ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து, அதிகாரிகள் ஸ்கூட்டரை சோதனை செய்ததில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று கேன்களில் 102 லிட்டர் எரிசாராயம் பதுக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து, ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து எரி சாராயம் கடத்திய வாலிபரை கலால்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.