சென்னை, ஜூலை 24: வேப்பேரி பகுதியில் தொழிலதிபர்களுக்கு கொக்கைன் விற்று வந்த ராஜஸதான் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 கிராம் கொக்கைன், ஒரு ஐ போன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சூளைமேடு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் கொக்கைன் விற்பனையில் ஈடுபட்டதாக மயூர் ராட் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை காவலில் எடுத்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது ஈவிகே.சம்பத் சாலையில் உள்ள சவுரவ் சவுகான் (36) என்பவருடன் இணைந்து, தொழிலதிபர்களுக்கு ஆர்டர் பெயரில் கொக்கைன் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்தார். இவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இவர் பெரிய அளவில் கொக்கைன் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் உறுதியானது.
இதனை தொடர்ந்து வேப்பேரி போலீசார், நேற்று முன்தினம் அதிரடியாக சவுரவ் சவுகான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரிடம் இருந்து 7 கிராம் கொக்கைன் மற்றும் ஒரு ஐ-போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், கொக்கைன் யாரிடம் இருந்து வாங்கினார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.