வேதாரண்யம், ஜூலை 11: வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியில் வனதுர்க்கை அம்மன் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் வளர்த்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்பு புனித நீர் அடங்கிய குடங்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. வண்ண மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இதுபோல் வேதாரண்யம் நகரில் மேல வீதியில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் சுவாமிக்கு பௌர்ணமியை முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப தூப ஆராதனை செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சிவ பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடி மாணிக்கவாசகரை வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.