வேதாரண்யத்தில் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்; கோயில் நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருப்போருக்கு மின் இணைப்பு
வேதாரண்யம், பிப்.27: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கோயில் இடங்களில் குடியிருந்து வருவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்து மின்துறை, கோயில் நிர்வாகம், நகராட்சி உள்ளிட்ட துறையினர் கலந்து பேசி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மின்வாரிய செயற் பொறியாளர் குமார் தெரிவித்தார்.
வேதாரண்யம் உப கோட்டத்தில் உள்ள வேதாரண்யம், வாய்மேடு, கரியாப்பட்டினம், விழுந்தமாவடி, கள்ளிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் மின்வாரிய செயற்பொறியாளர் குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் இளநிலை பொறியாளர்கள் அன்பரசன், மனோகரன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வேதாரண்யம் உபகோட்டத்தைச் நகராட்சி கவுன்சிலர் மயில்வாகனன், விவசாயிகள் சங்கம் அகிலன் உட்பட மின் நுகர்வோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர்.
மின் நுகர்வோர்கள் தெரிவித்ததாவது:
வேதாரண்யம் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் குடியிருந்து வருபவர்கள் தங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகளை தெரிவித்தும், கோவில் மனைகளில் குடியிருப்புகளுக்கு மின்சாரம் உண்டா? இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நிறைந்த வேதாரண்யம் பகுதியில் உள்ள மின்துறை சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினர்.
பின்னர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார் பேசியதாவது: மின் நுகர்வோர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து 20க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அந்த மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
மேலும் வேதாரண்யத்தில் கோயில் இடங்களில் வீடுகள் கட்டி புதிய மின் இணைப்பு கேட்பவர்களின் கோரிக்கைகள் குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறப்படும். அதன்படி மாவட்ட நிர்வாகம் வழியாக தமிழ்நாடு மின்வாரிய உயர் அதிகாரிகள், கோயில் நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட நகராட்சி துறையினர் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து பேசி கோயில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு தேவையான மின் இணைப்புகள் வழங்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மின்வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார். குறைதீர் கூட்டத்தில் முன்னதாக வேதாரண்யம் மின்வாரிய இளநிலை உதவி செயற்பொறியாளர் அன்பரசன் வரவேற்றார். உதவி பொறியாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.
நடவடிக்கை எடுக்கப்படும் என செயற்பொறியாளர் தகவல்
தமிழ்நாடு மின்வாரிய உயர் அதிகாரிகள், கோயில் நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட நகராட்சி துறையினர் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து பேசி கோயில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு தேவையான மின் இணைப்புகள் வழங்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


