விழுப்புரம், ஜூலை 24: விழுப்புரம் நகரில் வெறிநாய்கடிக்கு 20 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நகராட்சி, மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் நகரில் நேற்று முன்தினம் மகாராஜபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெறிநாய்கடித்து 20 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
மேலும் சிலர் மேல்சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து நேற்று மகாராஜபுரம் அரசு மருத்துவமனையில் லட்சுமணன் எம்எல்ஏ சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்காணித்து சிகிச்சை அளிக்கவும், நகராட்சியில் தெருநாய்களை பிடிப்பது குறித்து நகராட்சி அலுவலர்கள், மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது வெறிநாய்கடிக்குள்ளான 20 பேருக்கு தொடர்ந்து அடுத்தகட்ட சிகிச்சை அளிப்பது, நாய்களை பிடிக்க பிரத்தியேக வாகனம் வரவழைக்கப்பட்டு நகராட்சி மூலம் பிடித்து முற்றிலும் நாய்கள் தொல்லைகள் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்விபிரபு, நகராட்சி ஆணையர் வசந்தி, நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா, மருத்துவ அலுவலர் ஜோதி, நகர செயலாளர் சக்கரை, வெற்றிவேல், நகரமன்ற உறுப்பினர் சத்தியவதிவீரா, ஜெயந்தி மணிவண்ணன், சாந்தராஜ், புருஷோத்தமன், ஜனனிதங்கம், மணவாளன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.