Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் பக்தர்களிடம் நகைகளை திருடிய பெண் கைது காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் 4 குழந்தைகளின் வெள்ளி கொலுசும் அபேஸ் செய்த அம்பலம்

பள்ளிகொண்டா, ஆக.17: பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் நகை மற்றும் குழந்தைகளின் கொலுசுகளை அபேஸ் செய்த பெண் வசமாக சிக்கினார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் ஆடி 5ம் வெள்ளி திருவிழா மற்றும் 2ம்நாள் தெப்போற்சவ திருவிழா நேற்று நடைபெற்றது. இதனால் காலை முதலே கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர். மேலும் பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்து தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர். தொடர்ந்து சாமி தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோயில் நுழைவு வாயில் பகுதியிலும், தரிசனம் முடித்துவிட்டு வெளியே வரும் பகுதியிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

அப்போது, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மல்லகுண்டா பகுதியை சேர்ந்த ஞானசேகரன், பவித்ரா தம்பதியினர் குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தனர். அப்போது பவித்ராவிடம் இருந்த குழந்தை கத்தி கூச்சலிட்டு அழுதுள்ளது. என்னவென்ற திரும்பி பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒரு பெண் குழந்தையின் காலில் உள்ள வெள்ளி கொலுசினை பிளேடு வைத்து கட் செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பெண் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க பவித்ராவின் உறவினர்கள் கூச்சலிட அங்கிருந்தவர்கள் பெண்ணை மடக்கி பிடித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் பள்ளிகொண்டா காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் காவேரிப்பாக்கம் அத்திப்பட்டு மந்தைவெளி தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி அம்சவேணி(38) என்பதும், அவர் திருடிய கொலுசுகளை எல்லாம் அவர் அணிந்திருந்த உடையில் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் மீட்டனர்.

அந்த கொலுசுகள் கோயிலுக்கு வந்த பக்தர்களான பெங்களூரை சேர்ந்த தம்பதியின் 2வயது குழந்தையிடமும், திருப்பத்தூரை சேர்ந்த தம்பதியினரின் 2வது குழந்தையிடமும், கீழ்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தம்பதியின் 1வது குழந்தையிடம் என மொத்தம் 4 பேரின் வெள்ளி கொலுசுகளை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து புகாரின் பேரில் அம்சவேணியை போலீசார் கைது செய்தனர். மேலும், வேறு ஏதேனும் தங்க நகைகளை திருடி இவருடன் வந்தவர்களிடத்தில் கொடுத்து வைத்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட அம்சவேணி இதேபோன்று கோயில் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கைவரிசை காட்டி பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.