Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு உரிமம் பதிவு செய்ய புதிய செயலி: தாம்பரம் மாநகராட்சி அறிவிப்பு

தாம்பரம், மே 19: வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு உரிமம் பதிவு செய்ய புதிய செயலியினை, திங்கள் முதல் 2 நாள் சோதனை அடிப்படையில் தாம்பரம் மாநகராட்சி அறிமுகப்படுத்துகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, 2 ராட்வீலர் நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒன்றிய அரசு தடை செய்யப்பட்ட 23 வகை நாய்களில், ராட்வீலர் வகையும் ஒன்று, சிறுமியை கடித்த நாய்களின் உரிமையாளர் எந்த ஒரு உரிமமும் இன்றி நாய்களை வளர்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. எனவே, செல்லப் பிராணிகளுக்கு மாநகராட்சியில் உரிமம் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி போல தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வாசிப்பவர்களும், தங்களது செல்ல பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளை மாநகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற தாம்பரம் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தாம்பரம் மாநகராட்சி சார்பில் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு உரிமம் பதிவு செய்ய புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில், நாளை முதல் இரண்டு நாட்கள் சோதனையின் அடிப்படையில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டு, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள், தங்கள் நாய்கள் மற்றும் பூனைகளை புதிய செயலியில் பதிவு செய்து உரிமம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பதிவு செய்ய உள்ள செயலியை போலவேதான் தாம்பரம் மாநகராட்சியின் செயலியும் இருக்கும். இதில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்கள், தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணியின் இனம், வயது மற்றும் பாலினம் பற்றிய விவரங்களை பதிவு செய்து செயலியின் உள்நுழைய வேண்டும். மேலும், அவர்கள் தங்கள் முகவரி சார்ந்த ஆவணங்கள், வருடாந்திர ஆன்டிரேபிஸ் தடுப்பூசிக்கான ஆதாரத்தையும் செயலியில் பதிவேற்ற வேண்டும். இந்த விவரங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

அதோடு உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் சரியாக புதுப்பித்துக்கொள்ள வேண்டும். திங்கள் (நாளை) மற்றும் செவ்வாய் என 2 நாட்கள் சோதனையின் அடிப்படையில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் அதன் செயல்பாடு மற்றும் அதில் ஏதாவது பிழை இருந்தால் அவை 2 நாட்களுக்குள் சரி செய்யப்பட்டு புதன்கிழமை முதல் செயலி முழுமையாக செயல்பட தொடங்கும். சோதனையின் அடிப்படையில் திங்கள் (நாளை) முதல் செயல்பாட்டுக்கு வரும் செயலி மூலம் சுமார் 5 ஆயிரம் விண்ணப்பங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு உரிமம் பெற வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.