சங்கராபுரம், மே 20: சங்கராபுரம் அருகே வீட்டின் கூரையில் கொய்யா மரம் உரசிய தகராறில் கூலி தொழிலாளி கொடுவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மற்றொரு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (50). இவரது வீட்டுக்கு அருகே வசித்து வருபவர் கோபால் மகன் இளையராஜா (45). இவர்கள் இருவரும் கூலி தொழிலாளர்கள் ஆவர்.
இந்நிலையில் இளையராஜா வீட்டின் கொய்யா மரத்தின் கிளைகள் சண்முகம் வீட்டின் கூரையில் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் மேலும் ஆத்திரமடைந்த இளையராஜா அங்கு வைத்திருந்த மரம் வெட்டும் கொடுவாளை எடுத்து சண்முகத்தின் கழுத்தில் வெட்டியுள்ளார். பலத்த வெட்டு காயம் ஏற்பட்டதால் சண்முகம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சங்கராபுரம் போலீசார், இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் வீட்டின் கூரையில் மரம் மோதிய தகராறிலேயே கூலி தொழிலாளியை கொடுவாளால் வெட்டி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சண்முகத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இத்தகவலறிந்து திருக்கோவிலூர் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மனோஜ்குமாரும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.