Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விஷ சாராயத்தை தடுக்க தவறிய அதிகாரிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும் கருணாபுரத்தில் முத்தரசன் பேட்டி

கள்ளக்குறிச்சி, ஜூன் 22: விஷ சாராய சாவுக்கு காரணமான வியாபாரிகளை கைது செய்வதுபோல விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷசாராயம் காரணமாக இறப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. இந்த பகுதியில் உள்ள கூலித்தொழிலாளி மற்றும் தலித் மக்களை குறிவைத்து குடிக்கு அடிமையாக்கி அவர்களின் வருவாயை சாராய வியாபாரிகள் பறிக்கின்றனர். இதைப்போன்று கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் சாராய விற்பனை நடந்து வருகிறது. உள்ளூர் காவல்துறைக்கு, மதுவிலக்கு போலீசாருக்கு தெரிந்தே நகரத்தின் மையப்பகுதியில் சாராய விற்பனை நடக்கிறது. உள்ளூர் போலீசாரும், மதுவிலக்கு போலீசாரும் கூட்டணி போட்டு மாமூல் வாங்கிக்கொண்டு அவர்களை சுதந்திரமாக விற்க அனுமதித்துள்ளனர்.

மேலும் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதுபோல காவல் துறையினர் கூட்டணி சேர்ந்து மாமூல் வாங்கியதால்தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது. அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். சாராயம் விற்றவர்களை கைது செய்ததைபோல அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் அவர்கள் அச்சப்படுவார்கள். அதைப்போல விஷ சாராயத்தின் தீமைகள் பற்றி அரசும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குடும்பக் கட்டுபாட்டை அரசு பிரசாரம் செய்ததைபோல விஷ சாராயத்தையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.