விழுப்புரம் அருகே பரபரப்பு பிறந்து 2 நாட்களான பெண் சிசு வாய்க்காலில் சடலமாக மீட்பு கொலை செய்த கல்நெஞ்சம் கொண்ட தாய் போலீசார் விசாரணை
விழுப்புரம், அக். 18: விழுப்புரம் அகே பம்பை வாய்க்காலில், பிறந்து 2 நாட்களே ஆன பெண்சிசு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு பம்மை ஆறு அணைக்கட்டுவாய்க்காலில் பெண் சிசு சடலமாக கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமாரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர் தாலுகா காவல்நிலையத்திற்கு புகார்அளித்தார். போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை இறந்து வாய்க்காலில் சடலமாக கிடப்பது தெரியவந்தது. தொடர்ந்து அக்குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம்குழந்தையை வீசிகொலைசெய்தவிட்டு சென்றது யார்? என்பது குறித்தும் அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் குழந்தை பிறந்தவர்களின் பெயர் விவரங்களை சேகரித்தும், அருகிலுள்ள கிராமங்களிலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கள்ளக்காதலில் பிறந்ததால் தூக்கிவீசிவிட்டு சென்றாரா? அல்லது அடுத்தடுத்து பெண்குழந்தை பிறந்ததால் கல்நெஞ்சம்கொண்ட தாய் இந்த குழந்தையை வாய்க்காலில் வீசிகொலைசெய்துவிட்டு சென்றாரா? என்பதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.