Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் கற்கள், மணல் மூட்டைகளை அடுக்கி பலப்படுத்தும் பணி தீவிரம்

விழுப்புரம், டிச. 13: விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக தென்பெண்ணை ஆறு விளங்கி வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள், கிளை ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்பட்டு குடிநீர் மற்றும் விவசாய சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திருவெண்ணெய்நல்லூர் தாலுகா ஏனாதிமங்கலம் மற்றும் கப்பூர் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1949-1950ம் ஆண்டு எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது. 2021ம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாகவும், ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் காரணமாகவும், அணைக்கட்டு சேதமடைந்தது.

இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி விவசாயிகளின் துயர்துடைக்கும் வகையில் சேதமடைந்த அணைக்கட்டை சீரமைத்திடும் வகையில், 2023-2024ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் நீர்வளத்துறை அமைச்சர் சேதமடைந்த அணைக்கட்டை ₹86.25 கோடி செலவில் மறுகட்டுமானம் செய்ய அறிவிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டது. புதிய அணைக்கட்டின் அருகில் கரைகளின் இருபுறமும் கான்கிரீட் வெள்ளதடுப்பு சுவர் மற்றும் வெள்ளத்தடுப்பு கரை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாக்கள், ஏனாதிமங்கலம் மற்றும் கப்பூர் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு கடந்த அக்டோபரில் மழைநீர் தேக்கமடைந்தது. இந்த அணைக்கட்டின் மூலம் தென்பெண்ணையாற்றில் பெறப்படும் நீரை வலதுபுற பிரதான கால்வாய்களான எரளுர் மற்றும் ரெட்டி என இரு வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடதுபுற பிரதான வாய்க்கால்களான ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம்பாக்கம் என 3 வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கும் மொத்தம் 13100 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

இதனால் 36 கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் மேம்படும் வகையில் கட்டிமுடிக்கப்பட்டுது. இதனிடையே பெஞ்சல் புயல்காரணமாக கடந்த 30ம் தேதி வரலாறு காணாத மழை கொட்டிதீர்த்தன. மேலும் சாத்தனூர் அணையிலிருந்தும் 2 லட்சம் கனஅடிக்குமேல் தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் முதலமைச்சர் வருகைக்காக அமைக்கப்பட்டிருந்த சாலைகளும் அடித்துசெல்லப்பட்டு, கரையோரம் மண்அரிப்புகளும் ஏற்பட்டது. இதனால் அணைக்கட்டிற்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்க பொதுப்பணித்துறையினர் பெரிய அளவிலான கற்களை ெகாட்டி தடுப்புகளை ஏற்படுத்தியும், மண்அரிப்புகளை தடுத்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று இந்த பணிகளை அரசு முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சுன்சோங்கம் ஜடக், ஆட்சியர் பழனி நேரில் சென்று பார்வையிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் கூறுகையில், ‘விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருவதையொட்டி தென்பெண்ணைஆற்றின் குறுக்கே உள்ள பழைய எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் கீழ்புறம் அமைக்கப்பட்ட ஆற்றின் தடுப்புச்சுவரினை சுற்றிய கரைப்பகுதிகளில் பெருங்கற்கள் மற்றும் மணல் மூட்டைகளை கொண்டு கரையினை பலப்படுத்தும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தடுப்புசுவரின்கீழ் ஆற்றின் உட்பகுதியில் மண்அரிப்பு ஏற்படாத வகையில் பெருங்கற்கள் அடுக்கும் பணி நடைபெற்று வருவதை நேரில்பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொண்டு முடித்திட வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார்.