விற்பனைக்கு குவிந்த மலர் செடிகள் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு முன்னிட்டு பாட நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வட்டாரம் வாரியாக அனுப்பும் பணி
ஈரோடு, மே 29: ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்த பாட நோட்டுகள், புத்தகங்கள், சீருடைகள், கல்வி உபகரணங்கள் வட்டார கல்வி அலுவலகம் வாரியாக அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து, வருகிற ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் இலவசமாக சமச்சீர் பாடபுத்தகங்கள் வழங்கப்படும். அதன்படி, 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, ஈரோடு மாவட்டத்திற்கு 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கான முதல் பருவ பாட புத்தகங்கள், நோட்டுகள் முழுமையாக வந்தடைந்துள்ளது. அதனை புத்தக காப்பு மையத்தில் இருந்து தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான பாட புத்தகங்கள், நோட்டுகள், கல்வி உபகரணங்கள் அந்தந்த வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இங்கிருந்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கப்படும். பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள், நோட்டுகள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறையினர் தெரிவித்தனர்.


