சிவகாசி, மே 22: சிவகாசி மாநகராட்சியில் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைத்துள்ளனர். இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் விதமுறைகளை மீறி விளம்பரப் பலகைகள் காளான் போல முளைத்து வருகின்றன. ஒரு டிஜிட்டல் விளம்பர பேனருக்கு 6 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்ற நிலையில் அதே விளம்பர பேனருக்கு பணம் கட்டி ரசீது வாங்கி கூடுதல் நாட்கள் வைக்கப்படுகின்றன. இப்படி ஒரே விளம்பர போர்டுகள் சிவகாசி மாநகராட்சியில் பல நாட்களாக ஒரே இடத்தில் அகற்றப்படாமல் வைக்கப்படுகின்றன.
குறிப்பாக மாநகராட்சியில் பஸ் ஸ்டாண்ட், காமராஜர் சிலை, காரனேசன் பஸ் ஸ்டாப், மருதுபாண்டியர் மேட்டுத்தெரு செல்லும் பாதை, விருதுநகர் செல்லும் சாலை, வெம்பக்கோட்டை செல்லும் பகுதி, திருத்தங்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் விளம்பர போர்டுகள் ரெகுலராக தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. இப்படி மாநகராட்சியில் பல இடங்களில் நூற்றுக்கணக்கான விளம்பர போர்டுகள் தொடர்ந்து வைக்கப்படுகின்றன. சில பிளக்ஸ் பேனர்கள் மரங்களிலும் மின் கம்பங்களிலும் ஆபத்தான நிலையில் தொங்க விடப்பட்டுள்ளன. குறிப்பாக நகர் முழுவதிலும் கல்வி நிறுவனம், அரசியல் கட்சி, கண்காட்சி, விற்பனை சம்பந்தமாக ஏராளமான போர்டுகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் வளைவுகளில் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி முடிந்தும் கூட சில விளம்பர போர்டுகள் அகற்றப்படாமல் பல நாட்கள் அதே இடத்தில் உள்ளன. இதனால் ஒரே இடத்தில் ஏராளமான விளம்பர போர்டுகள் வரிசைகட்டி நிற்கின்றன. குறிப்பாக காரனேசன் பஸ் ஸ்டாப் பகுதியில் அபாயகரமான வளைவு பகுதியில் வாகன ஓட்டிகளின் கவனம் ஈர்க்கும் வகையில் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் குறுகிய சாலையில்தான் அதிகமான விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் விளம்பர போர்டுகள் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்கின்றனர். சிவகாசி பகுதியில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் காற்று, மழை பெய்வதால் பேனர்கள் மட்டுமல்லாது கம்பிகள் கூட பறந்து விபத்தை உண்டாக்கும் அபாயமும் உள்ளது.
இது அனுமதி பெற்று அல்லது அனுமதி பெறாமல் என எப்படி வைத்திருந்தாலும், பெரும் விபரீதம் ஏற்படும் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில் நகரில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பேனர்களையும் தயவு தாட்சண்யமின்றி அகற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சியில் அதிகமான விளம்பர பலகை வைக்க அதிகாரிகள் அனுமதிக்ககூடாது என்றும் நிகழ்ச்சி முடிந்த அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எங்களுக்கே தெரியாது சார்: புலம்பும் அதிகாரிகள்
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, மாநகரில் எங்களுக்கு தெரியாமல்தான் விளம்பர போர்டுகள் வைக்கின்றனர். இரவோடு இரவாக விளம்பர போர்டு வைத்து விட்டு செல்கின்றனர். காலையில் நாங்கள் அகற்ற சென்றால் ரெகமண்டுக்கு யாரையாவது அழைத்து வந்து விடுகின்றனர். நாங்களும் முடிந்த அளவு நடவடிக்கை எடுக்கத்தான் செய்கிறோம் என்றனர்.


