Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாரப்பட்டியில் ராணுவ தளவாட தொழிற்பேட்டை பகுதியில் விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சூலூர், நவ.10: சூலூர் அருகே வாரப்பட்டியில் ராணுவ தளவாட தொழிற்பேட்டை அமைய உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியின் போது சிப்காட் பணியாளர்களை அப்பகுதி விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். தங்களுக்கு உரிய வழி தடத்தை கொடுத்த பின்பு பணிகளை ஆரம்பிக்கும்படி கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று டிக் அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் அப்பகுதியில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

சூலூர் அருகே 370 ஏக்கர் தனியார் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி ராணுவ உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்பேட்டையை துவங்க ஒன்றிய அரசிடம் அளித்துள்ளது. இங்கு கையகப்படுத்தப்பட்ட பகுதியில் தமிழக சிப்காட் அதிகாரிகள் சாலை மற்றும் அடிப்படை மேம்பாட்டு பணிகளை கடந்த 6ம் தேதி மேற்கொள்ள வந்தனர். விவசாயிகள் அப்பகுதியில் வேலையை தடுத்து நிறுத்தினர். தங்களுக்கு உரிய வழி பாதையை சிப்காட் நிர்வாகம் மறித்து அங்கு சுற்றுச்சுவர் எழுப்ப முயல்வதாகவும் தங்களுக்கு உரிய வழிப்பாதையை விட வேண்டும் அதுவரை அங்கே பணிகளை செய்யக்கூடாது என தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து நேற்று டிக் அமைப்பின் அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது எனவும் விவசாயிகளின் கோரிக்கையை கலெக்டரிடம் தெரிவித்தால் தீர்வு கிடைக்கும் எனவும் கூறினர். இதையடுத்து விவசாயிகள் நாளை (11ம்தேதி) சந்தித்து இது சம்பந்தமாக மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். அப்போது சூலூர் எம்எல்ஏ விபி கந்தசாமி கூறுகையில்,``விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. இங்கு தொழிற்பேட்டை அமைக்கும் செய்தியை மட்டும் தனக்கு தெரிவித்தனர். விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதை அடைப்பதாக தெரிவிக்கவில்லை எனக்கூறினார். விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை நோக்கி விவசாயிகள் முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என கூறினார்.

ஆலோசனையின் போது சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மகாலிங்கம், வாரப்பட்டி தர்மராஜ், தமாகா விவசாய அணி மாவட்ட தலைவர் கனகராஜ்,விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் மாநிலத் துணைச் செயலாளர் கணேசன், சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், அதிமுக மேற்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் நடராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு கூடி இருந்தனர்.