பாலக்கோடு, ஜூன் 5: தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே கடத்திகொள்மேடு கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி (56), விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி வேலு(37) என்பவருக்கும் வழித்தடம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இதுகுறித்து நல்லூர் கிராம நிர்வாக அதிகாரி நேற்று கோவிந்தசாமியின் தங்கை பூங்கொடியிடம் விசாரணை செய்து சென்றுள்ளார்.இது குறித்து கோவிந்தசாமி, பூங்கொடி இருவரும் நேற்று மாலை பேசி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சென்ற வேலு மற்றும் அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான செல்வராஜ் (40), சத்யா (30) ஆகியோர், கோவிந்தசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.தகராறு முற்றியதில் வேலு, கோவிந்தசாமியை அரிவாளால் தலையில் வெட்டினார். இதை தடுக்க சென்ற அவரது மனைவி லதாவையும், உடன் ெசன்றவர்கள் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில், மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான செல்வராஜ், சத்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.
+
Advertisement


