திருச்சி, டிச.5: வங்கதேச வன்முறையை கண்டித்து திருச்சியில் போராட்டம் நடத்திய 250 பேரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டம் நடந்தது. தொடர்ந்து, திருச்சி மரக்கடை பகுதியில் நேற்று போராட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் போராட்டம் குறித்து விளக்கி பேசினார். பாஜக நிர்வாகிகள் உள்பட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை விளக்கி முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து, போலீசார் அவர்களை கைது செய்து, தனியார் திருமண மஹாலில் அடைத்தனர். அங்கு அரங்கு நிரம்பியதால் பாதிக்கும் மேற்பட்டோரை வேறு மண்டபத்துக்கு கொண்டு செல்ல முயன்றதாக தெரிகிறது. பின்னர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் 20 பெண்கள் உள்பட மொத்தம் 250 பேரை போலீசார் கைது செய்தனர்.


