Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரூ.7 கோடி மதிப்பில் மக்கள் நலத்திட்டங்கள்: குடிநீர் ஊரணிக்கு பாதுகாப்பு வேலி அமைப்பு

திருமயம்,அக்.2: திருமயம் அருேக உள்ள மேலப்பனையூர் ஊராட்சியில் ரூ.7 கோடி மதிப்பில்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலப்பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னனூர் கிராமத்தில் உள்ள குடிநீர் ஊரணியை பாதுகாக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் முள்வேலி அமைக்கப்பட்டது.

இதே போல் பனையப்பட்டியில் இருந்து மேலப்பனையூர் வழியாக கூடலூர் செல்லும் சாலை, குழிபிறையில் இருந்து புறகரைப்பட்டி வழியாக மேலப்பனையூர் செல்லும் சாலை புனரமைக்கப்பட்டு பல ஆண்டுகளைக் கடந்த நிலையில் சாலை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை சீரமைக்க அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியே 17 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் புனரமைப்பு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இதே போல் மேலப்பனையூர் ஊராட்சிக்கு ரூ.28 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் பொன்னனுர் குடிநீர் ஊரணி, மேலப்பனையூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா மற்றும் மேலே குறிப்பிட்ட சாலைகள் பணி தொடக்க பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஆர் டி ஓ ஐஸ்வர்யா தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில்:

தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறங்களில் புனரமைக்கப்படும் சாலைகள் கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டுமே தவிர தனியாருக்கு பயன் அளிக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. அதனால் தான் திருமயம் சட்டமன்ற தொகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 70 முதல் 80 சதவீத சாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளது என்பதை எங்களால் நெஞ்சை நிமிர்த்தி கூற முடியும். ஏற்கனவே ஆட்சி செய்த யாரும் சாலை, கட்டிடம், குடிநீர் வழங்க வில்லை என்று சொல்ல முடியாது.

ஆனால் மக்களின் தேவை அறிந்து அதிக நிதி ஒதுக்கி ஒரு அரசு செய்து இருக்கிறது என்றால் அது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுதான் என்று எங்களால் பெருமையோடு சொல்லிக் கொள்ள முடியும்.

இந்நிலையில் இன்றைய தினம் மேலப்பனையூர் ஊராட்சி நீண்ட நாள் கோரிக்கையான ஊராட்சி மன்ற கட்டிட அலுவலகம் ரூ.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு திறப்பு விழா கண்டுள்ளது. அதேபோல் மேலப்பனையூர் ஊராட்சியில் இன்று மட்டும் சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் பொன்னனூர் கிராமத்தில் உள்ள குடிநீர் ஊரணி பாதுகாப்பு வேலி அமைத்தது உள்ளிட்டவை அடங்கும். 2024-25ம் ஆண்டுகளில் மேலப்பனையூர் ஊராட்சிக்கு மட்டும் 8 கோடியே 26 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் மேலப்பனையூர் ஊராட்சித் தலைவர் மேகநாதன் ஏற்கனவே பெற்ற சிறந்த தலைவர் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள அதிகாரிகளை எல்லாம் அணுகி இன்னும் பல பணிகளை செய்து தர வேண்டும் என கேட்டு கொண்டு மேலப்பனையூர் ஊராட்சியில் ஏறக்குறைய 70 முதல் 80 சதவீத பணிகளை செய்து விட்டார். மீதமுள்ள 20% பணிகளின் தொடக்க விழாவையும் இன்று நடத்திவிட்டார். எனவே 100% பணிகளை முடித்த ஒரே ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன் தான்.

அதற்காக ஆங்காங்கே ஒரு சில குறைகள் இருக்கலாம் இருந்தபோதிலும் எல்லாவற்றையும் மிஞ்சி ஊராட்சித் தலைவர் மேகநாதன் தன்னுடைய சக்திக்கு மீறி எவ்வளவு செயல்பட முடியுமோ செயல்பட்டு இருக்கிறார். அதுதான் பாராட்டப்பட வேண்டியது. பல ஊராட்சிகளில் தனக்கு வருகிற நிதி போதும் அதுல நான்கு திட்டத்தை எடுப்போம் மக்கள் நல பணிகளை செய்வோம் என்று இருக்கின்றனர். அவர்களையும் குறை சொல்ல முடியாது. ஆனால் தன்னுடைய சக்திக்கு மீறி செயல்படுபவர்தான் சிறந்த ஊராட்சி மன்ற தலைவர் அப்படிப்பட்ட தலைவர் தான் மேலப்பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன். மேலும் அதிகாரிகள் மக்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளையும் நல்ல முறையில் அணுகக்கூடிய தலைவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக லெம்பலக்குடி ஊராட்சியில் நியாய விலை கடை, புதிய மின்மாற்றியை அமைச்சர் ரகுபதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். விழாவில் தாசில்தார் புவியரசன், பிடிஓ வெங்கடேசன், மாவட்ட அவைத் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் சிதம்பரம், கணேசன், மாவட்ட பிரதிநிதி துரைராஜா, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராமசாமி, லெம்பலக்குடி ஊராட்சி தலைவர் பாலு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருண் சேகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.