Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரூ.45 லட்சம் இழப்பீட்டு தொகையை விடுவிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியர் கைது: 2 இடைத்தரகர்களும் சிக்கினர் திருவள்ளூரில் பரபரப்பு

திருவள்ளூர், ஜூலை 1: திருவள்ளூரில் சாலை விரிவாக்கத்திற்காக அரசு கையகப்படுத்திய இடத்திற்கு ரூ.45 லட்சம் இழப்பீட்டு தொகையை விடுவிக்க ரூ.75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியர் உள்பட 3 பேரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை செல்லும் சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சாலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, இழப்பீட்டுத் தொகை அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் வேல்யூ ஸ்பேஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தை கையகப்படுத்திய அரசு, அதற்காக சுமார் ரூ.45 லட்சம் இழப்பீட்டுத் தொகை கொடுக்க வேண்டி இருந்தது. இந்த தொகையை பலமுறை நில எடுப்பு தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சனிடம், அந்த நிறுவனத்தின் மேலாளர் ஆஸ்டின் ஜோசப் என்பவர் கேட்டும், அவர் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுமார் ரூ.1 லட்சம் லஞ்சமாக கொடுத்தால் நிலம் கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.45 லட்சத்தை உடனடியாக விடுப்பதாக நில எடுப்பு தனி வட்டாட்சியர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவனத்தின் மேலாளர் ஆஸ்டின் ஜோசப், இழப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாததால் இதுகுறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில், திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன், இன்ஸ்பெக்டர் மாலா ஆகியோரது வழிகாட்டுதலின்படி, ரசாயனம் தடவிய ரூ.75 ஆயிரத்தை, தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சனுக்கு, இடைத்தரகர்களாக செயல்பட்ட கோமதிநாயகம் மற்றும் வெள்ளத்துரை ஆகியோரிடம், வேல்யூ ஸ்பேஸ் கம்பெனி நிறுவன ஊழியர் ஒருவர் நேற்று கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சனை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், அவருக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்ட ரூ.75 ஆயிரத்ைத கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் இடைத்தரகர்களாக செயல்பட்ட கோமதிநாயகம் மற்றும் வெள்ளத்துரை ஆகியோரையும் கைது செய்து விசாரணை செய்தனர். மேலும், தேசிய நெடுஞ்சாலை பணிக்காக இதுவரை அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு, இதுபோன்று எவ்வளவு ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளனர் என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 பேரிடமும் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் நில எடுப்பு தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சன், இடைத்தரகர்கள் கோமதிநாயகம், வெள்ளத்துரை ஆகிய 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.