ராமநாதபுரம், ஜூலை 11: ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள குரூப்-4 தேர்வை 29,129 பேர் எழுதுகின்றனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-4 தேர்வு நாளை (ஜூலை 12) நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-4 தேர்வில் 29,129 பேர் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தேர்வு 104 மையங்களில் நடைபெறவுள்ளது. தேர்வு பணியில் 28 நடமாடும் குழு, 11 கண்காணிப்பு குழு அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு மையங்கள் முழுவதும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படவுள்ளது. தேர்வு அறையில் தேர்வு எழுத வருபவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா என்பதை கண்காணிப்பு அலுவலர் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிரிவு அலுவலர் சவுந்திர பாண்டியன் கலந்து கொண்டனர்.


