ராஜபாளையம், ஜூலை 19: ராஜபாளையத்தில் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆய்வாளர் நவாஸ்தீன் தலைமையிலான போலீசார் முக்கிய சாலைகளில் நின்று வாகன ஓட்டிகளை நிறுத்தி தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் விளக்கினர். அப்போது ஆய்வாளர் நவாஸ்தீன், தற்போது அனைவரும் வண்டியில் தலைக்கவசம் வைத்துள்ளீர்கள்.
ஆனால் போலீசை பார்த்தால் மட்டுமே அணிவதும் கடந்தவுடன் அதை கழற்றி வைத்துவிட்டு செல்வதும் தினமும் நாங்கள் பார்த்துவருகிறோம். எங்களுக்காக தலைக்கவசம் அணிவதை தவிர்த்து உங்களை நம்பியிருக்கும் குடும்பத்தை நினைத்து பாருங்கள் என்று கூறியதுடன் தலைக்கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு தலைக்கவசமும் வழங்கினார். உடன் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பங்கேற்றனர்.