Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 12 ஆயிரம் ஆடுகள் விற்பனை

மாதவரம், ஏப். 11:ரம்ஜான் என்றாலே அசைவ உணவுகளை இஸ்லாமிய பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகில் உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் தருவது வழக்கம். இதனால் ரம்ஜான் மற்றும் அதற்கு முந்தைய நாள் அசைவ உணவுகளின் விற்பனை அதிகரிக்கும். குறிப்பாக ஆட்டிறைச்சி விற்பனை அதிகமாக காணப்படும். தற்போது ஆட்டு இறைச்சியின் விலை அதிகளவில் இருப்பதால் பிரியாணிக்காக பலரும் கோழிக் கறியை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆண்டுதோறும் ரம்ஜானுக்கு முந்தைய நாள் மற்றும் ரம்ஜான் அன்று காலை சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஆடுகளின் விற்பனை களைக்கட்டும். இந்த ரம்ஜானுக்கு சென்னையில் மட்டும் சுமார் 20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மிகவும் பழமை வாய்ந்த ஆடு தொட்டிகளில் ஒன்றான புளியந்தோப்பு ஆடுதொட்டியில் இந்த ஆண்டும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விற்பனை களைகட்டியது. நேற்று மாலை மற்றும் இன்று காலை வரை சுமார் 12 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுபோக சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் உள்ளிட்ட ஆடுதொட்டிகளிலும் அமோக விற்பனை நடந்துள்ளது. 8 கிலோ முதல் 12 கிலோ வரை உள்ள ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலும் இந்த ஆடுகள் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. ஒரு கிலோ ₹700 முதல் ₹720 வரை விற்கப்படுகிறது. ஆடுகளின் எடைக்கு ஏற்றார் போல் ₹6 ஆயிரம் முதல் விற்பனை நடந்து வருகிறது.

ஆடுகளின் விற்பனை குறித்து சென்னை ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் ரம்ஜான், தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது ஆட்டிறைச்சி விற்பனை படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு மக்களிடம் ஏற்பட்டுள்ள ஒருவிதமான மாற்றமும் காரணமாக அமைகிறது. பெரும்பாலான மக்கள் காலை தொழுகைக்குச் சென்றுவிட்டு கடைகளில் பக்கெட் பிரியாணியை வாங்கி நண்பர்களுக்கு வழங்கிவிட்டு, உறவினர் வீடுகளுக்குச் சென்று விடுகின்றனர். வீடுகளில் இறைச்சி உணவுகளை செய்து கொடுக்கும் பழக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஓட்டல்களில் பிரியாணி மற்றும் இறைச்சி உணவுகளின் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் ரம்ஜான் அன்று கிருத்திகை மற்றும் வியாழக்கிழமை சேர்ந்து வருவதால் 10 சதவீதம் வரை ஆட்டிறைச்சி விற்பனை குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு போன்று ஓரளவுக்கு வியாபாரம் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் 22 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என தெரிவித்தார்.