Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரத்தத்திற்கான தேவை அதிகரிப்பு இளைஞர்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்: விருதுநகர் கலெக்டர் வேண்டுகோள்

விருதுநகர், ஜூன்.15: ரத்தத்திற்கான தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால், இளைஞர்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வேண்டுகோள் விடுத்தார்.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக ரத்த தானத்தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து, ரத்த தானம் செய்தார். அதை தொடர்ந்து ரத்த தான முகாம்களில் அதிக முறை ரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது: இந்திய அளவில் ரத்தத்திற்கான தேவை ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஆண்டிற்கு ஏறத்தாழ 1 லட்சம் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. அதில் 15ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. விபத்துக்களில் காயமுற்றோர், உள் காயமுற்றோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதற்கான அறுவை சிகிச்சையின் போது ரத்த தேவைப்படுகிறது.

தேவைக்கான ரத்தத்திற்கு, குறைவாக ரத்த கிடைக்கிறது. தமிழகத்தில் 80 சத ரத்தம் ரத்த தானம் செய்வோரால் கிடைக்கிறது. மாவட்டத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு அமைப்புகளில் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக அவர்கள் மூலமாகவே ரத்தம் பெற்று பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தேவையான ரத்தத்தில் பாதியளவு ரத்தம் மட்டுமே கிடைப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. அதில் வெறும் 300 முதல் 350 மி.லி ரத்தம் மட்டுமே தானத்தில் பெறப்படுகிறது. கொடுத்த ரத்தம் 2 வாரங்களில் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகி விடும். 3 மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானத்தை எவ்வித பாதிப்பும் இன்றி செய்யலாம். அதனால் இளைஞர்கள் பயமின்றி ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்