தர்மபுரி: தர்மபுரி தாலுகா ஆபீஸ் வளாகத்தில் 100 ஆண்டுகள் கடந்த நீதிமன்ற கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு மாவட்ட நீதிமன்றமும், சிறப்பு சார்பு நீதிமன்றமும் நேற்று முதல் முறையாக செயல்பட தொடங்கின.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் கடந்த 1965ம் ஆண்டு உதயமானது.
தர்மபுரி மாவட்டத்துடன் தற்போதுள்ள கிருஷ்ணகிரி மாவட்டமும் இணைந்திருந்தது. புதிதாக உருவான தர்மபுரி மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக, கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. அதே வேளையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளிட்ட சில அலுவலகங்கள், கிருஷ்ணகிரியில் அமைந்திருந்தன.
குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் மட்டும் தர்மபுரியில் இயங்கி வந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம் உதயமான பின்பு கடந்த 2008ம் ஆண்டு தர்மபுரியில் மாவட்ட முதன்மை நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் புதிதாக செயல்பட தொடங்கின. இதையடுத்து, தர்மபுரி மாவட்டத்திற்கென மாவட்ட மகளிர் நீதிமன்றம், குடும்ப நல வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம், விரைவு நீதிமன்றம், விபத்து வழக்கு தீர்ப்பாயம் என அடுத்தடுத்து 16 நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. நீதிமன்றங்கள் அனைத்தும் தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்தன. இதில், 1917ம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டிடத்தில் உரிமையியல் நீதிமன்றமும், 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றமும் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், தர்மபுரியில் பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும், ஒரே வளாகத்தில் அரசு கட்டடங்களில் செயல்படும் வகையில், தர்மபுரி தடங்கம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் 18 ஏக்கரில் கடந்த 2016ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தர்மபுரி தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கிய அனைத்து நீதிமன்றங்களும், தர்மபுரி தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு சென்றன.
இதனால், தர்மபுரி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் காலியாக கிடந்தன. இவற்றில் 100 ஆண்டுகள் கடந்த 2 நீதிமன்ற கட்டிடங்களும்(ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது) அடங்கும். இந்த கட்டிடங்களும் பழமை மாறாமல் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது போன்றே கலைநயத்துடன் புனரமைக்கப்பட்டது. இந்த கட்டிடங்களிலும் பணிகள் முழுமையாக முடிந்ததால் நேற்று முதல் நீதிமன்றங்கள் இயங்க தொடங்கின. சிறப்பு மாவட்ட நீதிமன்றமும்(மோட்டார் வாகன விபத்து வழக்குகள்), குற்றவியல் நடுவர் மன்றம் எண் -2 கட்டிடத்தில் சிறப்பு சார்பு நீதிமன்றமும்(மோட்டார் வாகன விபத்து வழக்குகள் கோருரிமை தீர்ப்பாயம்) நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த 2 நீதிமன்றங்கள் அலுவலக தொடக்க விழா நேற்று நடந்தது. தர்மபுரி சிறப்பு மாவட்ட நீதிபதி(மோட்டார் வாகன விபத்து வழக்குகள்) ராஜா, சிறப்பு சார்பு நீதிபதி விபிசி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி தரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தமயந்தி ஆகியோர் புதிய நீதிமன்ற அலுவலகத்தை தொடங்கி வைத்தனர். துவக்க நாளிலேயே இந்த 2 நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை தொடங்கியது.