போடி, ஜூலை 16: தேனி மாவட்டம் போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் கிருஷ்ணா நகர், மகாலட்சுமி நகர், சாரல் நகர் உள்ளிட்ட பகுதிகள் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளாக உள்ளன. இப்பகுதி மக்களுக்கு போடிமெட்டு மலையடிவாரம் மங்கள கோம்பையிலிருந்து 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உப்பு கோட்டை முல்லைப் பெரியாற்றிலிருந்து மாநில நெடுஞ்சாலை வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கிட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பல்வேறு தெருக்களில் தோண்டப்பட்ட இடங்கள் சேதமடைந்தும், பள்ளங்களாகவும் இருந்ததால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை உடனடியாக சீரமைக்க மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தோண்டப்பட்ட இடங்களில் மண் போட்டு சமப்படுத்தும் பணிகளும், பல்வேறு தெருக்களில் பேவர் பிளாக் பதிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.