காரமடை, மே 13: காரமடையை அடுத்துள்ள சீலியூர் பகுதியில் அரசு உதவி பெறும் துரைசாமி கவுடர் மேல்நிலைப்பள்ளி கடந்த 1958ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கர்மவீரர் காமராஜர் திறந்து வைத்த இப்பள்ளியில் தற்போது சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் இந்த பள்ளியில் கடந்த 1983ம் ஆண்டு 10ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்களின் கூடல் விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் முன்னாள் மாணவர்கள் சுமார் 60 பேர் பங்கேற்றனர். இதில் 12 பேர் அரசு பள்ளி ஆசிரியர்களாகவும், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையிலும் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். 42 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துக்கொண்ட மகிழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் ஒருவரையொருவர் நலம் விசாரித்தும், தங்களது குடும்பத்தினர் குறித்து தெரிவித்தும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியும் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டி கௌரவித்தார்.
தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் பள்ளியின் வளர்ச்சி நிதியாக ரூ.2 லட்சம் பணத்தை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜ்குமார், செயலாளர் வாசுதேவன் முன்னிலையில் வழங்கினர். நிகழ்ச்சிகளை முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைத்திருந்தனர்.


