முத்துப்பேட்டை, மார்ச் 15: முத்துப்பேட்டை அடுத்த ஆரியலூர் ஊராட்சி சித்தாலத்தூர் 6வது வார்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், ஆரியலூர் ஊராட்சி சித்தாலத்தூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்த மின் வினியோகம் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் பல்வேறு வகையில் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதையடுத்து மின்சார வாரியம் சார்பில் சமீபத்தில் அப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க முடிவு செய்து சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 63கே.வி புதிய மின்மாற்றி அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. இந்நிலையில் நேற்று புதிய மின்மாற்றி திறப்பு விழா நடைபெற்றது. இதில் மின்சார வாரிய இளநிலை பொறியாளர் குமார் போர்மேன் அசோகன், மின் ஊழியர்கள் பன்னீர் செல்வம், மகேந்திரன், மின் ஊழியர் திருஞானசபந்தம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், கிராம முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழக மின்சார ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.