Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன

விக்கிரவாண்டி, ஜூன் 4: தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து வெப்ப காற்று அதிகளவில் வீசி வருகிறது. மேலும் ஆங்காங்கே சமீப நாட்களாக மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் சமீப நாட்களாக கோடை வெயில் தாக்கத்தை குறைக்க மழை பெய்தும் வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சூறாவளி காற்றுடன் பலத்த மழை மற்றும் மின்னலுடன் இரவு முழுவதும் மழை பெய்தது. இந்நிலையில் காணை பகுதியில் சூறாவளி காற்றால் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதில் பெருமளவு திருக்கோவிலூர் செல்லும் சாலையில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனை மின் ஊழியர்கள், பொதுமக்கள் உதவியோடு மரங்களை அப்புறப்படுத்தினர்.

அதுமட்டுமல்லாமல் கனமழை பெய்ததன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்தது. பல இடங்களில் வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. திடீரென சூறாவளி காற்று வீசியதால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் இரவு முழுவதும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். பின்னர் மின் கம்பம் மற்றும் மின் வயர்களை சரிசெய்து மீண்டும் மின்சாரம் வழங்கினர்.

கல்வராயன்மலை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தாழ் வெள்ளாறு கிராமத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ் வெள்ளாறு, மேல் வெள்ளாறு கிராமத்துக்கு இடையே செல்லக்கூடிய சாலையில் பழமை வாய்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் வெள்ளாறு கிராமத்தில் இருந்து மேல் வெள்ளாறு, சேர்வாய்ப்பட்டு, பளுவப்பாடி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லக்கூடிய போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். பின்னர் இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.